சமுதாயத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜனதாவின் சூழ்ச்சி வலை: சோனியா காந்தி 

மராட்டிய சட்டசபைக்கு வருகிற 15-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிரசாரம் ஓய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் தலைவர்கள் மராட்டியத்தை முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரசாரம் செய்ய நேற்று முதல் தடவையாக மராட்டியம் வந்தார். கோலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- பா.ஜனதாவும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள். அவர்கள் தனித்தனியாக செயல்படுவது வெறும் பார்வைக்கு மட்டும் தான். ஆனால் உண்மையிலேயே அவர்கள் ஒன்றாக தான் இருக்கிறார்கள். அந்த இரு கட்சியினரும் சந்தர்ப்பவாதிகள். ஆட்சிக்கு வர அவர்கள் எதையும் செய்வார்கள். சமுதாயத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதே பா.ஜனதாவின் நோக்கம். அவர்களது சூழ்ச்சி வலையில் விழுந்து விடாதீர்கள்.

நமது காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களை பா.ஜனதாவினர் கேலி செய்தனர். தற்போது அதே திட்டங்களை தான் நரேந்திர மோடி முன்னோக்கி நகர்த்தி செல்கிறார். குஜராத்தை விட மராட்டியத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வதாக எதிராளிகள் கூறுகிறார்கள். ஆனால் அனைத்து துறைகளிலும் குஜராத்தை விட மராட்டியம் ஏற்கனவே முன்னேறிய மாநிலம்.

தேர்தல் வரும்போதெல்லாம் பா.ஜனதா பெரிதாக பேசுவார்கள். ஆனால் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தம் இருக்காது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், அவர்கள் மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்தார்கள். 100 நாட்களில் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதாக கூறினார்கள். தற்போது என்ன ஆனது?.

இந்திய எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் நமது வீரர்கள் பலியாகி வருகிறார்கள். பாகிஸ்தானுக்கு உடனுக்குடன் சரியான பதிலடியை கொடுத்து வருகிறோம் என்று பேசுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே என்ன நடக்கிறது?.

பா.ஜனதா அரசின் 60 நாட்கள் செயல்பாட்டை கேட்டால், 60 வருடங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். அப்படியானால், கணக்கு வழக்குகளை வெளியிட அவர்களுக்கு பயமா?. தேர்தல் நேரத்தில் சத்ரபதி சிவாஜியை மோடி புகழ்வதை கண்டிக்கிறேன். எங்களது அரசு சத்ரபதி சிவாஜிக்கு அரபி கடலில் பிரமாண்ட சிலை வைக்க திட்டமிட்டது. அதற்கு அவர்கள் எதிர்த்தார்கள்.

மராட்டியம் காங்கிரஸ் தலைமையில் தான் வளர்ந்தது. பெண்கள், விவசாயிகள், பிற்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் போராடியது. அவர்களுக்காக நாங்கள் தான் சட்டங்களை கொண்டு வந்தோம். வருங்காலத்திலும், மராட்டிய மாநிலத்தின் முழு வளர்ச்சிக்கு நாங்கள் உறுதியேற்கிறோம்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply