அரசு வக்கீல் பவானிசிங் மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

அரசு வக்கீல் பவானிசிங் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ் சாட்டியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு வழக்கறிஞர் பவானிசிங் அளித்த பேட்டி ஒன்றில் தி.மு.க.வை குறை கூறியிருப்பதாலும், அரசு வழக்கறிஞர்கள் பற்றியும், குறிப்பாக வழக்கறிஞர் பவானி சிங்கை பற்றியும் சில கருத்துகளைத் தெரிவிக்கின்றேன்.

ஏனென்றால் பவானிசிங் அளித்துள்ள பேட்டியில், “நான் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல் பட்டேன் என்று எப்படி சொல்ல முடியும்?. சட்டம் தெரியாதவர்கள் வேண்டுமானால் எனது நிலைப்பாட்டை விமர்சிக்கலாம். நான் மனசாட்சியுடன் நடந்து கொண்டேன். இந்த வழக்கில் என்னை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக அரசு வக்கீலாக நியமனம் செய்யப்பட்ட நாள் முதல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக தி.மு.க.வினர் கூறினர். அதை தீர்ப்பின் மூலம் பொய்யாக்கினேன். இப்போதும் அதே விமர்சனம் வைக்கிறார்கள். இது சரியல்ல” என்றெல்லாம் தெரிவித்திருப்பதால், அவரது செயல்பாடுகள் குறித்து விளக்குகிறேன்.

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முதலில் தமிழகத்தில் நடைபெற்றபோது, ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருந்தது. விசாரணை முறையாக நடக்கத் தவறியது கண்டும், ஏற்கனவே முறையாக சாட்சியம் அளித்தவர்களை எல்லாம் மிரட்டி மாறுபட்ட கருத்தினை வலியுறுத்தி வாங்கிய காரணத்தாலும், அந்த வழக்கினை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி கழகப் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடுத்த வழக்கில் 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதியன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சேமா ஆகியோர் கொண்ட பெஞ்ச்தான், வழக்கினை பெங்களூருக்கு மாற்றி தீர்ப்பளித்தது.

மேலும் அந்தத் தீர்ப்பில், “குற்றவாளிகள் அனைவரும் கேள்வி எழுப்பப்படும்போது நீதிமன்றத்தில் தவறாது ஆஜராவதுடன், இவ்வழக்கை தினமும் எடுத்து விசாரிக்க வேண்டும். வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டது.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை விரைவாக விசாரிக்க வேண்டுமென்றும், அன்றாடம் விசாரிக்க வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்து அது வெளிவந்தது 18௧1௨003. அப்போது தமிழகத்தில் நடைபெற்றது அ.தி.மு.க. ஆட்சி. இந்த உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, சென்னை தனி நீதிமன்றம், வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை எப்போது பிறப்பித்தது தெரியுமா? 10௯௨004. அதாவது 10 மாதங்களுக்குப் பிறகுதான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது அப்போதைய நிலைமை.

தற்போது என்ன நிலை தெரியுமா? அரசு வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதாட வேண்டியவர். ஆனால் தற்போது அரசு வழக்கறிஞராக உள்ள பவானிசிங், அவ்வாறு வாதாடாமல் அரசு வழக்கையே குலைக்கும் வகையில், வழக்கின் புலன் விசாரணை அதிகாரியையே குற்றவாளிகள் தரப்புச் சாட்சியாக விசாரணை செய்ய அனுமதித்ததோடு, இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்க மற்றும் வைர நகைகளை, வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமலே, வழக்கின் இறுதி வாதத்தை முடிக்க ஆர்வம் காட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நம்முடைய க.அன்பழகன், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பவானி சிங்கை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். அதன் காரணமாக கர்நாடக மாநில அரசும் உடனடியாக செயல்பட்டு அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து பவானி சிங்கை நீக்கி உத்தரவிட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றம் வரை சென்று, தங்களுக்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞராக பவானி சிங் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினருக்கு ஆதரவாகவும், அரசு தொடுத்துள்ள வழக்குக்குப் பாதகமாகவும் பவானிசிங், எந்தெந்த வகையில் நடந்து கொள்கிறார் என்பதற்கான பல சான்றுகளும் அப்போது உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அரசு வழக்கறிஞரான பவானிசிங்கை கர்நாடக மாநில அரசே மாற்றிய நிலையில் கூட, உச்சநீதிமன்ற நீதிபதி, சவுஹான் இந்த வழக்கினை பவானிசிங்கே தொடர்ந்து அரசு சார்பில் நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவித்தார்.

ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு, வழக்கு தாமதப்படுத்தப்பட்ட நிலையிலும் இந்த வழக்கினை மேலும் தொடர்ந்து தாமதப்படுத்த பல்வேறு தந்திரங்களும் உத்திகளும் கையாளப்பட்டன. அதிலே ஒன்றுதான் அரசு வழக்கறிஞர், பவானிசிங்கே சில நாட்களுக்கு முன் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தார். அதாவது சென்னையில் உள்ள பாஸ்கரன் என்பவரிடம் கொடுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்குச் சொந்தமான 1,116 கிலோ வெள்ளிப் பொருள்களை, பெங்களூர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வர வேண்டுமென்று ஒரு மனுவினை பவானிசிங் நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.

வழக்கு முடிகின்ற நேரத்தில், அரசு வழக்கறிஞர் இவ்வாறு ஒரு மனுவினைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? வழக்கினை தாமதப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்த மனு, அரசு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்டது.

அரசு வழக்கறிஞரான, பவானிசிங் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து பணியாற்றி வருகிறார். அந்தக் கால கட்டங்களில் இதுபோன்ற மனு எதையும் அவர் தாக்கல் செய்யவில்லை. இதனைப் பார்க்கும்போது, வழக்கைக் காலதாமதம் செய்யும் நோக்கத்தில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நடந்து கொண்டார் என்றே கருதத்தோன்றுகிறது. கால நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. அந்த வாதமும் சரியானதல்ல. எனவே வெள்ளிப் பொருள்களைக் கொண்டுவர வேண்டுமென்ற அரசு வழக்கறிஞரின் மனுவில் எவ்வித முகாந்திரமும் இல்லை. இது தேவையற்ற மனு என்று கருதி தள்ளுபடி செய்கிறேன்” என்று அரசு வழக்கறிஞர், பவானி சிங்கின் மனு பற்றி சிறப்பு நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர், பவானி சிங் எவ்வாறெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொள்ள வேறு உதாரணம் வேண்டுமா?

இந்த வழக்கிலே சிறப்பாக வாதிட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் பவானி சிங்கைப் பற்றி நீதிபதி குன்ஹா, தனது தீர்ப்புரையில், “அரசு வழக்கறிஞர் பவானிசிங், அரசு சாட்சிகளின் முதல் விசாரணையை மட்டும் படித்துவிட்டு, தனது வாதங்களை முடித்துவிட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்” என்பதிலிருந்தே, இந்த வழக்கிலே அரசு வழக்கறிஞர் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட “புகழ்”களுக்கு உரிய பவானி சிங் தான் தி.மு.க. அவரைப் பற்றித் தவறாகக் குற்றஞ்சாட்டுவதாக பேட்டி கொடுத்துள்ளார். தற்போது கூட கர்நாடக உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுக்கலாமா என்று நீதிபதி கேட்டபோது, ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கடுமையாக எழுத்து மூலமாக தனது எதிர்ப்பை காலையிலே தாக்கல் செய்துவிட்டு, மாலையில் ஜாமீன் கொடுக்கலாம் என்று வாய்மொழியாகப் பரிந்துரை செய்து, இந்த வழக்கு விசாரணையை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் குழப்பத்தில் ஆழ்த்தியவர்தான் அரசு வழக்கறிஞர் பவானி சிங். காலையிலே அவர் எழுதிக் கொடுத்ததற்கும், மாலையில் வாய்மொழியாகக் கூறியதற்கும் இடையிலே நடைபெற்றது என்ன?.

அவரைப் பற்றி தி.மு.க. அல்ல, ஜாமீன் வழக்கை விசாரித்த கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ள கருத்து என்ன தெரியுமா?. “சொத்துக் குவிப்பு வழக்கில் அரசின் சார்பில் ஆஜராகி வாதிட்டு, குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையும், அபராதமும் வாங்கிக் கொடுத்த அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங், கடந்த 30-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்சேபணை மனுவில், “குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்தால், அவர்கள் தப்பி விடுவார்கள். அதன் மூலம் நீதிமன்றத் தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும்” என்று தெரிவித்திருந்தார்.

அதே வழக்கறிஞர், “குற்றவாளிகளை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யலாம்” என்று மாற்றிக் கூறியுள்ளார். குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்ய அரசு விரும்பினாலும், அவர்கள் மீதான குற்றத்தைப் பார்க்கும்போது, அவர்கள் ஜாமீனில் விடுதலையாகும் தார்மீக உரிமையை இழந்துள்ளதால், நீதிமன்றம் ஜாமீன் வழங்காது” என்று கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது பவானிசிங்குக்கு அளித்த பாராட்டிதழா? பவானி சிங் பதில் கூறுவாரா?.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply