சிறையில் ஜெயலலிதா சிறப்பு சலுகைகள் எதையும் கேட்பதில்லை: கர்நாடக டி.ஐ.ஜி.ஜெயசிம்மா பேட்டி

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ஜெயலலிதாவுக்கு உள்ள நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கு சிறையில் உள்ள மருத்துவர்களே சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் நலமாக உள்ளார். அவரது உடல் ஆரோக்கியம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. அவர் சிறைச்சாலையின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். சிறைக்கு வந்த நாளில் இருந்து ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்தித்து பேசவில்லை. ஆனால் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் தினமும் 4 முதல் 5 பேரை சந்தித்து பேசுகிறார்கள். ஜெயலலிதாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு வெளியில் இருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ஜெயலலிதா சிறையில் வழங்கப்படும் பால், ரொட்டி உள்ளிட்ட இதர உணவு வகைகளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி சாப்பிடுகிறார். இட்லி, பொங்கல் போன்ற உணவு வகைகளை 2, 3 நாட்களுக்கு ஒரு முறை வரவழைத்து சாப்பிடுகிறார். சிறையில் உள்ள வசதிகளையே அவர் பயன்படுத்துகிறார்.

தனக்கென்று சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றோ, சலுகைகள் அளிக்க வேண்டும் என்றோ அவர் ஒரு நாளும் கேட்கவில்லை.

சிறையில் உள்ள பெண் அதிகாரி திவ்யஸ்ரீ ஜெயலலிதாவை கவனித்துக்கொள்கிறார். ஜெயலலிதாவுக்கு சசிகலா, இளவரசி ஆகியோரும் ஆதரவாக உள்ளனர்.”

இவ்வாறு டி.ஐ.ஜி. ஜெயசிம்மா கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply