எம்மை பிரிவினைவாதிகளாக்கி ஆட்சி நடத்த முயற்சிக்க வேண்டாம் : சுமந்திரன்
தமிழீழத்திற்கான போராட்டத்தினை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை நீக்குவேன் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதியில் உண்மை இருக்குமாயின் இப்போதே நிறைவேற்று முறைமையினை நீக்க வேண்டும். எம்மை பிரிவினைவாதிகளாக்கி ஆட்சி நடத்த முயற்சிக்க வேண்டாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலை நடத்தாது அதிகார பரவலாக்கலை மேற்கொள்வதுடன் நிறைவேற்று அதிகாரத்தினையும் நீக்க வேண்டும். கூட்டமைப்பின் முடிவும் இதுவேயாகும் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்று வடக்கில் ஆட்சி அமைத்த நாம் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் எம்மை ஜனாதிபதி வைக்கோல் பட்டடை நாய் என்று விமர்சித்தமை வடக்கில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் அவமதித்தமைக்கும் சமனாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;
ஒரே நாட்டிற்குள் அதிகாரங்களை பகிர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். எமது கோட்பாட்டில் பிரிவினைவாதம் இல்லை எனவும் பிரச்சினைக்கு தீர்வுகான தயார் எனவும் நாம் அரசுக்கு தெளிவாக தெரிவித்து விட்டோம். உயர் நீதிமன்றிலும் இதை உறுதிப்படுத்தியுள்ளோம். அரசாங்கம் கடந்த காலங்களில் இருந்து எம்மை பிரிவினைவாதிகளாக சித்தரித்து தூற்றி வந்தமைக்கு முடிவு காணும் வகையில் எமது பக்க நியாயங்களை முன்வைத்து விட்டோம். இதற்கும் மேல் எவ்வாறு நாம் பிரிவினைவாதிகள் இல்லை என்பதை நிரூபிக்க முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரிவினை வாதத்தினை கைவிட்டால் நான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவேன் என ஜனாதிபதி தெரிவித்தது உண்மையாயின் ஜனாதிபதி இப்போதே நிறைவேற்று முறைமை கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும். அவரின் வாக்குறுதிகள் சுத்தமானதெனின் உடனடியாக தனது நிறைவேற்று அதிகாரங்களை நீக்கி நாட்டில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் அவசர ஜனாதிபதித் தேர்தலொன்றினை நோக்கி அரசாங்கம் நகர்கின்றது. ஆனால் ஜனாதிபதி தேர்தலொன்று தற்போது அவசியமற்றது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை விடுத்து அதிகாரப் பகிர்வினை மேற்கொண்டு நிறைவேற்று முறைமையினை நீக்க வேண்டியதே இப்போதைய தேவையாகும். மேலும் ஜனாதிபதி தேர்தலை நடாத்த இன்னும் இரண்டு ஆண்டுகளும் உள்ளன. அதற்கு முன்னர் நாட்டில் செய்ய வேண்டிய பல வேலைத் திட்டங்களும் உள்ளன. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
வடக்கு மக்களை அவமதிக்கும் செயல்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வட மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அபிவிருத்தி என்ற பெயரில் பல நிகழ்வுகளில் அவர் பங்கு பற்றியிருந்தார். அதேபோல் இந்த நிகழ்வுகள் எவற்றிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியிருக்கவில்லை. இதற்கான காரணங்கள் என்னவென்பதை முழுமையாக விளக்கி வட மாகாண முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், வடக்கில் ஜனாதிபதி பேசும்போது எமது காரணங்கள் தொடர்பில் எதுவும் பேசவில்லை. குறிப்பாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது வட மாகணத்தின் ஜனநாயக தீர்ப்பிற்கு விரோதமாக செயற்பட்டு தன்னுடைய விருப்பத்திற்கு அமைய செயற்படுகின்றார். என கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அது தொடர்பில் எவ்வித பதிலும் ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கவில்லை.
அதேபோல் தமிழ் மக்கள் அனைவரும் சேர்ந்து வட மாகாணசபையினை உருவாக்கியிருக்கின்ற போது அதனை புறக்கணிக்கும் வகையில் என்ன செய்கின்றது இந்த அரசு எனவும் எமது கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இவை ஒன்றிற்கும் அரசாங்கம் பதில் தெரிவிக்கவில்லை.
அதை விடுத்து மிகவும் அநாகரிகமான முறையிலே வைக்கோல் பட்டடை நாய்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பினை ஜனாதிபதி வர்ணித்திருக்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வடக்கு தமிழ் மக்கள் 80 சதவீத வாக்குகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மக்கள் 90 வீதமான வாக்குளை வழங்கியுள்ளனர். அங்கே போய் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாய்கள் என வர்ணிப்பதானது எம்மை விமர்சிப்பதாக அல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்கிய தமிழ் மக்களை வர்ணிப்பதாவே உள்ளது. வடக்கில் தமிழ் மக்களை அவமதித்து தனது தேர்தல் பிரசாரத்தினை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். வடக்கு மக்களை அவமதித்தால் தெற்கில் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்றே ஜனாதிபதி நினைக்கின்றார். எனவே, நாம் சிங்கள மக்களிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில் ஒரு சமூகத்தை அவமதித்து கீழ்த்தரமாகப் பேசும் ஜனாதிபதியை சிங்கள மக்களும் நிராகரிக்க வேண்டும் என்பதே. நாடு ஒன்றுபட வேண்டும் என மேடைகளில் பேசிக்கொண்டு ஒரு சமூகத்தினை தாழ்த்தும் ஜனாதிபதிக்கு மக்கள் ஆதரவு வழங்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply