வங்குரோத்து அரசியலை மறைக்க புலத்திலிருந்து பொய் இணையங்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக கீதாஞ்சலி குற்றச்சாட்டு

வடக்கில் வங்குரோத்து அரசியல் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் மக்களுக்கான உண்மையான சேவைகளை மேற்கொள்ளும் அரசாங்கக் கட்சி அரசியல்வாதிகள் மீதான தமது காழ்ப்புணர்வுகளை கொட்டித் தீர்க்க புலம்பெயர் நாடுகளிலுள்ள தமது இரத்த உறவினர்களை பாவித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளர் திருமதி. கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார். வெளிநாடுகளில் முறையான விஸா எதுவுமின்றி ஒளிந்து வாழும் தமது சகோதரர்கள் திருட்டுத்தனமாக நடத்தும் முகவரியற்ற இணையத்தளங்கள் மூலமாக இங்கு உள்ளூரில் மக்களுக்கு உண்மையான சேவைகளை மேற்கொண்டுவரும் அரசியல்வாதிகள் மீது பொய்யான கற்பனைக் கதைகளை அவிழ்த்துவிட்டு அதனைத் தமது அரசியல் பிரசாரமாக மேற்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக ஜனாதிபதி அவர்களின் வடக்கிற்கான விஜயத்தின்போது இவர்களால் இயக்கப்படும் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகள் அருவருக்கத்தக்கன. தமிழினத்திற்கே இது அவமானம் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தாம் ஒரு சிலரைத் தவிர எவருமே அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது இவர்களது எண்ணமாகும் எனவும் கீதாஞ்சலி குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கில் பெண்கள் எவருமே அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது இவர்களது கொள்கையாக உள்ளது.

அவ்வாறு எப்பெண்மணியாவது தனது உயரிய சேவையால் மக்களால் அங்கீகரிக்கப்பட்டால் அவர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு அவர்கள் பற்றி அவதூறாகப் பிரசாரம் செய்கின்றனர். இதற்காகவே தமது வெளிநாட்டு சகோதரர்கள் மூலமாக பல பொய்யான முகவரிகளில் இணையத்தளங்களை நடத்தி வருகின்றனர். எனவும் அவர் தெரிவித்தார். இதனை வடபுல தமிழ்த் தாய்மார்கள், யுவதிகள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் எதிர்க்க வேண்டும் எனவும் கீதாஞ்சலி தெரிவித்தார்.

அன்று மக்கள் புலிகளினால் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு யுத்தப் பிரதேசங்களுக்குள் பலாத்காரமாகத் தள்ளிவிடப்பட்டபோதும், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் வெளிநாட்களில் தமது குடும்பங்களுடன் சொகுசாக வாழ்ந்தவர்கள் இன்று வந்து மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். அரசாங்கம் செய்து வரும் உதவிகளை உதாசீனம் செய்கின்றனர். தமிழ் மக்கள் இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply