கருப்பு பணம் மீட்கும் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்: காங். கோரிக்கை

கருப்பு பணம் மீட்கும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த தகவல்களுக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலின்போது வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பது தொடர்பான பிரச்சினையை எழுப்பிய நரேந்திர மோடி, கருப்பு பணத்தை பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என்று குற்றம் சாட்டினார். மத்தியில் பா.ஜனதா கூட்டணி அரசு பதவியேற்ற பின்பு வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ரோத்தகி ஒரு மனுதாக்கல் செய்தார்.

அதில், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளதால், கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட இயலாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடி சமூக ஊடகங்களிலும், தனது பிரசார கூட்டங்களிலும் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உண்டு. அந்த பெயர்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏன் வெளியிடத் தயங்குகிறது என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்.

ஆனால், தற்போது கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறது.

இதற்காக குறைந்த பட்சம் தங்களது ஆட்சியின் செயல்பாட்டுக்கும், சொல்லுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையாவது நீங்கள்(மோடி) தைரியமாக மக்களிடம் சொல்லி இருக்கவேண்டும்.

பாராளுமன்ற தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று இதனை ஒரு தேர்தல் பிரச்சினையாகவே பா.ஜனதாவும், மோடியும் கிளப்பினர். ஆனால், இப்போது பெயர்களை வெளியிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவிக்கிறது.

இதன் மூலம் தனது, அரசியல் லாபத்துக்காக பா.ஜனதாவும், மோடியும் இப்பிரச்சினையை பயன்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்காக பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply