வடமாகாண த.தே.கூ உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு
இலங்கை அரசியல்யாப்பை மீறும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிய வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்று தொடர்பாக விளக்கமளிக்குமாறு இலங்கை மேன்முறையிட்டு நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. நாட்டுப் பற்றுள்ள தேசிய அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அந்த அமைப்பின் தலைவர் ரவீந்திர நிரோஷன் தெரிவித்தார்.
அண்மையில் வட மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளின் அப்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.
அந்த கடிதத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அத்துடன் தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய நிலங்களை இலங்கை இராணுவம் பலவந்தமான முறையில் கையகப்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று கூறியுள்ள மனுதாரர், இந்தப் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதன் மூலம் சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இலங்கை அரசியல் யாப்பை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த மனுவை
தொடர்ந்து விசாரணைக்கு எடுக்க முடியுமா என்பது தொடர்பாக எதிர்வரும் 30 திகதி விளக்கமளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply