புலிகளுக்கு எதிரான தடையை உடனடியாக கொண்டு வர வேண்டும்: ஐ.தே. க
ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை உடனடியாக கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி பாராளுமன்றத்தில் விசேட பிரேரனையொன்றை நிறைவேற்றி அதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்புவற்காக பாராளுமன்றத்தில் விசேட அமர்வொன்றை கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே. கட்சி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கையை முன்வைத்தது.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பிய ஐ.தே. கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸவே விடுதலைப் புலிகள் மீதான தடையை வலியுறுத்தி பிரேரணையொன்றை எதிர்தரப்பும் ஆளுந்தரப்பும் இணைந்து நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் விசேட அமர்வை கூட்டுமாறு வலியுறுத்தினார்.
இவ்விடயம் தொடர்பாக சஜித் பிரேமதாஸ எம்.பி. மேலும் சபையில் உரையாற்றுகையில்;
ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அங்குள்ள நீதிமன்றம் நீக்கியுள்ளது.
புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தின் தீர்ப்பை முடிவை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
புலிகள் மீதான தடை நீக்கம் இலங்கையின் இறையான்மை மற்றும் சுயாதீனத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.
எனவே, பாராளுமன்றத்தில் விசேட அமர்வொன்றை கூட்டி விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி ஆளும் தரப்பும் எதிர்க் கட்சியும் இணைந்து ஏகமனதாக பிரேரணையொன்றை நிறைவேற்றி அதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே. கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். அனைத்து கட்சிகளும் இணைந்து புலிகளுக்கு எதிராக மீண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்க வேண்டுமென்பதை இந்தப் பாராளுமன்றத்தின் ஊடாக வலியுறுத்துவோம்.
ஐ.தே. கட்சி இலங்கையின் சுதந்திரம் ஐக்கியம் இறையான்மைக்காக போராடிய கட்சி என்ற வகையில் புலிகள் மீது மீண்டும் தடையை கொண்டு வர வேண்டிய பாரிய பொறுப்பு ஐ.தே. கட்சிக்கு உள்ளது.
வாசுதேவ குறுக்கீடு
சஜித் பிரேமதாஸ இவ்வாறு தனது உரையை தொடர்கையில் குறுக்கீடு செய்த சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சஜித் எம்.பியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஏகாதிபத்திய வாதிகளின் அடிவருடிகளான அவர்களின் காலணிகளை நக்கிய உங்களுக்கு இலங்கையின் சுதந்திரம் இறையாண்மை தொடர்பாக பேசுவதற்கு அருகதையில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆவேசத்துடன் சுட்டிக்காட்டினார்.
இதனை எதிர்த்து சஜித் எம்.பி. மறுபுறத்தில் அமைச்சரை அமருமாறு தெரிவித்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சபாநாயகரின்
பதில்
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் சஜித் பிரேமதாச எம்.பிக்கும் இடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் சபைக்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் குறுக்கிட்ட சபாநாயகர் சமல் ராஜபக் ஷ
இலங்கையின் சுதந்திரம் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் வெற்றி கொள்ளவும் தனி ஒரு கட்சி மற்றும் போராடவில்லை.
அக்காலத்தில் இலங்கையிலிருந்த அனைத்து கட்சிகளும் போராடின எனக் கூறி தர்க்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன்போது, ஐ.தே. கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரோசி சேனாநாயக்க ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
சஜித் பிரேமதாஸவின் புலித்தடை தொடர்பாக பேச முற்பட்ட போது இது ஒரு ஒழுங்குப் பிரச்சினையல்ல என சபாநாயக்கர் தெரிவத்து அனுமதி வழங்க மறுத்தார். இறுதியாக சஜித் பிரேமதாஸவின் பிரேரணை கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply