அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடமாட்டோம்
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதி தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையில் “ஆயுத ஒழிப்பு மற்றும் சர்வதேச அமைதி’ தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆயுத ஒழிப்பு மாநாட்டுக்கான நிரந்தரப் பிரதிநிதி டி.பி. வெங்கடேஷ் வர்மா பங்கேற்றுப் பேசியதாவது: அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அணு ஆயுத விவகாரத்தைப் பொருத்தவரை, எந்த நாட்டின் மீதும் இந்தியா முதலில் அணு ஆயுதங்களைப் பிரயோகப்படுத்தாது. அதேபோல், அணு ஆயுதம் இல்லாத நாட்டின் மீதும் இந்தியா இத்தகைய தாக்குதலை நடத்தாது. இந்த இரண்டு விஷயங்களிலும் இந்தியா தெளிவாக உள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியாவை இணையும்படி வல்லரசு நாடுகள் கூறுவது ஒருதலைபட்சமாக உள்ளது.
இந்த விவகாரத்தில் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 5 நாடுகளுக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பதை பாரபட்சமான நடவடிக்கையாக இந்தியா கருதுகிறது. எனவே, அணு ஆயுதமே இல்லாத நாடாக மாறி இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தை சர்வதேச அளவிலும், பாரபட்சமற்ற முறையிலும், ஆயுதம் இல்லாததை உறுதிப்படுத்தும் விதமாகவும் செயல்படுத்தினால் இந்தியா அதில் இணைய தயாராக உள்ளது.
சர்வதேச அளவில் பாரபட்சமில்லாத முறை கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே அணு ஆயுதப் பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்றார் டி.பி. வெங்கடேஷ் வர்மா.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் 1970-இல் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply