கருப்பு பணக்காரர்கள் பட்டியல் வெளியானால் காங்கிரசுக்கு சங்கடம் வராது: ப.சிதம்பரம் பேட்டி

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்று பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. இந்நிலையில், கருப்பு பண முதலைகளின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட முடியாது என்று சமீபத்தில் கூறியது. இருப்பினும், கோர்ட்டில் தெரிவிப்பதாக கூறியுள்ளது. ஆனால், கருப்பு பண விவகாரத்தில் மோடி அரசு, மக்களை திசைதிருப்பி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அதற்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘கருப்பு பண முதலைகளின் பட்டியல் வெளியிடப்பட்டால், காங்கிரஸ் கட்சி தர்மசங்கடத்துக்கு உள்ளாகும். ஏனென்றால், அக்கட்சியைச் சேர்ந்த ஒரு பெரிய நபரின் பெயர் அதில் உள்ளது‘ என்று கூறினார்.

இந்நிலையில், இதற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார். ஒரு டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

அருண் ஜெட்லியின் கருத்து, ‘பிளாக்மெயிலுக்கு‘ சரியான உதாரணம். பிளாக் மணியில் (கருப்பு பணம்) இருந்து பிளாக்மெயிலுக்கு அவர் மாறி விட்டார். அதை விட்டு விட்டு, பட்டியலை வெளியிடுங்கள்.

அந்த பட்டியலில் பெரிய பெயர் இருந்தால், அதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்படாது. என்ன பெயர் இருந்தாலும், அது தனிநபர்களுக்குத்தான் சங்கடத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், இது தனிநபர்களின் தவறு.

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள தனிப்பட்ட தலைவர்களை காங்கிரஸ் கட்சியுடன் முடிச்சு போடும் வேலையை யாரும் செய்யக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்டியலில் உள்ள எல்லா பெயர்களையும் வெளியிட வேண்டும் என்றும், குறிப்பிட்ட பெயர்களை மட்டும் வெளியிடும் போக்கு கூடாது என்றும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அஜய் மக்கான் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply