நைஜீரியாவில் பஸ் நிலையத்தில் குண்டு வெடித்து 5 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்தநிலையில் நைஜீரியாவின் வடக்கு மாநிலமான பவுச்சிக்கு உட்பட்ட அசாரே பகுதியில், பஸ் நிலையம் ஒன்றில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால் அருகில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் குழப்பமான சூழ்நிலை நிலவியது. இந்த கொடூர சம்பவத்தில் 5 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதை தொலைவில் இருந்து யாரோ வெடிக்கச்செய்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் நைஜீரியாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் சம்பவம் நடந்த பவுச்சி மாநிலம், போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply