இந்திய வீரர்களுக்கு இலங்கை ராணுவம் பயிற்சி அளிப்பதா? : வைகோ கண்டனம்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும், கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை. இலங்கைத் தீவில் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணக் காணொளிகளில் நிரூபிக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் மனிதாபிமானமுள்ளோர் இதயங்களை நடுங்கச் செய்தது.
இந்தத் தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடந்தையாக செயல்பட்டு தமிழ் இனக்கொலை யுத்தத்தை இயக்கியது.
இந்தியாவின் முழு உதவியால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று இலங்கை பாராளுமன்றத்திலேயே கொடியவன் ராஜபக்சே கூறினான். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்தது. புதிய அரசு பொறுப்பேற்று கொலைகார ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவழைத்தபோதே அதை தடுப்பதற்காக நான் எவ்வளவோ நரேந்திரமோடி யிடம் மன்றாடிப் பார்த் தேன்.
அக்டோபர் 9 ஆம் தேதி அன்று இந்தியாவின் பாதுகாப்பு துறை செயலாளர் ஆர்.கே.மாத்தூர் சிங்கள அதிபர் ராஜபக்சேவை சந்தித்து இலங்கையிடம் இருந்துதான் நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
பச்சைக் குழந்தைகளையும், கர்ப்பிணிப்பெண்களையும் கொல்வதும், இளம்பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்வதும், கோவில்களைத் தாக்குவதும், மருத்துவமனைகள் மீது குண்டு வீசி நோயாளிகளைக் கொல்வதும், உலகம் தடை செய்த குண்டுகளை வீசி பொதுமக்களை பலியிடுவதும், இந்திய ராணுவம் சிங்களவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களா?
இது மட்டுமல்ல, சிங்கள ராணுவ அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள ராணுவத்தினருக்கு பாடம் வகுப்பு நடத்தப் போகிறார்களாம். பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம்.
இன்னொரு கொடுமை நடக்கப் போகிறது. இலங்கையினுடைய கடற்படையின் தளபதி ஜெயந்த் பரேரா டெல்லிக்கு வரப்போகிறானாம். அவனுக்கு 27–ந்தேதி இந்தியக் கடற்படை வீர விருது மரியாதை செலுத்தப் போகிறதாம். எதற்காக? 578 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றதற்காக இந்த வரவேற்பா?
முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு உதவியபோதும், ஒளிவு மறைவாக செய்தது. கடைசி கட்டத்தில் பயந்து பின் வாங்கியது.
ஆனால், பாரதிய ஜனதா அரசு சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே உதவுகிறது. அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தமிழ் இனக் கொலைகாரன் கொடியபாவி ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது.
எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது. ஜாலியன் வாலாபாக்கிலே படுகொலை நடத்தினானே ஜென்ரல் டயர் அவனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கச் சொன்னால் எப்படியோ! அதுபோன்றதுதான் ராஜபக்சேவுக்கு விருது கொடுக்கச் சொல்வது.
இப்படிச் சொன்னதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையோ, பிரதமரோ இதுவரை கண்டித்தார்களா? இல்லை. அவரது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.
வெந்த புண்ணில் வேல் வீசுகிறது இந்திய அரசு. மான உணர்ச்சி தமிழ்நாட்டில் அழிந்துவிடவில்லை. அது அழியாது. அது ஆயிரங்காலத்துப் பயிர். அதனால் தான் முத்துக்குமார்கள் தீக்குளித்து மடிந்தார்கள்.
கேள்வி கேட்பார் இல்லை. நாம் எதைச் செய்தாலும் யார் தடுக்க முடியும் என்ற மனோபாவத்தில் மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள கொடியோருக்கு துணையாகவும் செயல்படும் போக்கு எதிர்காலத்தில் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை காலம் நிச்சயமாக நிரூபித்துக் காட்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply