சம்பள கட்டமைப்பு தயாரிக்கப்படும் வரை நவம்பர் மாதம் முதல் விசேட கொடுப்பனவு : அமைச்சர் சுசில்
வரவு – செலவு திட்டத்தின் முன்மொழியப் பட்ட அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட புதிய சம்பள கட்டமைப்பு தயாரிக்கப்படும் வரை அரச ஊழியர்களுக்கு 3000 ரூபாவும் ஓய்வூதியக்காரர் களுக்கு 2500 ரூபாவும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தொடர்பாக நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது.
இச் செய்தியாளர் மாநாட்டின் போதே ஸ்ரீல. சு. கவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய சம்பள கட்டமைப்பின் அடிப்படையில் ஜனவரி முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 5 ஆயிரத்து 200 ரூபாவும் ஓய்வூதியம் பெறுவோர்க்கு 5 ஆயிரத்து 500 ரூபாவும் அதிகரிப்படவுள்ளது. இச்சம்பளக் கட்டமைப்பு தயாரிக்கப்படும் வரையில் அரசாங்க ஊழியர்களுக்கு 3000 ரூபாவும் ஓய்வூதியம் பெறுவோர்க்கு 2500 ரூபாவையும் நவம்பர் மாதம் முதல் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை ஓய்வூதியக்காரர்கள் முன்வைத்த கோரிக்கையிலும் கூடுதலான கொடுப்பனவு அதிகரிப்பினை ஜனாதிபதியவர்கள் மேற்கொண்டிருப் பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஓய்வூதியக் கொடுப்பனவிற்காக 2006 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கட்டமைப்பிற்கு முற்றிலும் மாறுபட்ட கொடுப்பனவு கட்டமைப்பே 2015 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஓய்வூதியக்காரர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டியுள்ளது. இதனைத் தவிர ஓய்வூதியக்காரர்களின் நிலையான வைப்புக்களுக்கு ஆகக் கூடிய 12 சதவீத வட்டியையும் அவர்கள் பெற்றுக் கொள்ளும் கடனுக்கு ஆகக் குறைந்த 06 சதவீத வட்டியையும் அறவிடுவதற்கான ஏற்பாடுகள் வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் பேர் புதிதாக அரசாங்க சேவைகளில் இணைத்துக் கொள்ளப்பட விருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மனித வளத்துடன் கூடிய அபிவிருத்தியே நாட்டிற்கு அவசியமென்பதனை வலியுறுத்தியுள்ள ஜனாதிபதியவர்கள். க. பொ. த. உயர்தர சித்தியடைந்த, பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து கற்பதற்கும், மற்றும் ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் பிரதேச சபையின் முகாமைத்துவ உதவியாளர்களாக அவர்களை இணைத்துக் கொள்வதற்கும் இந்த வரவு செலவு திட்டத்தில் வழிசமைக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவ டைந்ததைத் தொடர்ந்து நாட்டில் பாரிய அபிவிருத்திப் பணிகளை அரசாங்க முன்னெடுத்திருந்தது. 55 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் ஆயிரம் மஹிந்தோதய பாடசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் 46 சதவீதமாகவிருந்த மின்சாரத்தை 96 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். 85 சதவீதமான மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுத் தந்துள்ளோம். நீர்ப்பாசன திட்டங்களுக்காக சுமார் 15 மில்லியன் ரூபாவிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்க் கட்சியினர் கூறுவது போலல்லாது, நாட்டின் சகல தரப்பினருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ள தெனவும் அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply