யாழ். பெண்களின் நிலைமைகள் வேதனையளிக்கின்றன : மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன்

யாழ்.குடாநாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் 16 மற்றும் 17 வயது யுவதிகள் தாய்மையடையும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன், தமது வயிற்றில் வளரும் பிள்ளைகளுக்கு தந்தை யார் என்பதை அறிவதற்காக இவர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக 16,17 வயதுடைய சிறுமிகள் தாய்மையடையும் செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. தமது வயிற்றில் வளர்கின்ற குழந்தைகளுக்குத் தந்தை யார் என்பதை அறிவதற்கான டி.என்.ஏ. மரபணுப் பரிசோதனைகளுக்காக பல பெண்கள் வைத்தியசாலைகளை நாடுகின்றார்கள். இந்த நிலைமைகள் வேதனையளிக்கின்றனவென்று மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தினமாகிய நேற்று மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடத்தப்பட்ட மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

“”சமூக ரீதியாகப் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றிலிருந்து விடுபட பெண்கள் தாங்களாகவே முன்வரவேண்டும்.

வீடுகளிலேயே பெண்கள் பல வன்முறைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த வீட்டு வன்முறைகள் தொடர்பாக 2006 ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் ஆய்வொன்றை நடத்தினோம்.

அந்த ஆய்வின் அடிப்படையில் 1,312 சம்பவங்கள் தொடர்பான தரவுகள் சேரிக்கப்பட்டன.அந்தச்சம்பவங்களின் தொகுப்புகள் யாழ். மாவட்டத்திலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளில் வராந்தம் பிரசுரமாகின்றன. அவற்றைப் பெண்கள் அனைவரும் படித்தறியவேண்டும். அதன்மூலம் அவர்கள் மத்தியில் ஒரு வழிப்புணர்வு ஏற்படும்’ என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சட்டத்தரணி மு. றெமீடியஸ் உரையாற்றுகையில்;

“”இன்று நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலைகள் காரணமாக எந்தவொரு விடயத்தையும் வெளியே சொல்ல மக்கள் பயந்துகொண்டிருக்கின்றார்கள். மனித உரிமைகள் தொடர்பான விடயங்களைக் கூட வெளியே சொல்ல முடியாதவர்களாக அது தொடர்பான நிகழ்வுகளைக் கூட ஏற்பாடு செய்ய முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான விடயங்கள் சிலவற்றை நாங்கள் நாளாந்தம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். நாங்கள் அனுபவிக்கின்ற துன்பதுயரங்களை பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்லுகின்ற போது அதனைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற ஏனைய பெண்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.யாழ். குடாநாட்டிலுள்ள பல நிறுவனங்கள் குறைந்த ஊதியத்துடன் பெண்களை வேலைக்கு அமர்த்தியிருக்கின்றன. இது அவர்களின் உரிமைகளை மீறும் செயலாகும்.

பெண்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்களை உருவாக்கி 30 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், அதில் 10 வீதமான உரிமைகளை கூட யாழ்ப்பாணப் பெண்கள் அனுபவிக்கவில்லை. பெண்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பலர் முயன்றுகொண்டிருந்தாலும் யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கெதிரான 40 விதமான பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வுகள் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.அ.வேதநாயகம் யாழ். அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிராணி மில்ஸ், வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் க. பொன்னம்பலம், யாழ். இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி வே.பேரின்பநாதன் மற்றும் யாழ்.பலநோக்குக் கூட்டுறவுத் சங்கத் தலைவர் ப.கிரிதரன் ஆகியோரும் உரையாற்றினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply