கூட்டமைப்பு எதிரணியுடன் கைகோர்க்க வேண்டும் :லக்ஷ்மன் கிரியெல்ல

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வட மாகாணத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணியுடன் கைகோர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு தேவையென அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற நிலையில் வடக்கின் வாக்குகளை வென்றெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டம் என்னவென வினவிய போதே அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த சிங்கள வாக்குகளை எதிர்பார்த்து தேர்தலில் குதிப்பது முட்டாள் தனமான செயல். பௌத்த சிங்கள வாக்குகள் இரு தரப்பினருக்குமே கிடைக்கும். ஆனால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் எவரேனும் ஒரு தரப்பினையே பிரதிநிதித்துவப்படுத்தும். அதன் காரணத்தினாலேயே அரசாங்கம் வடக்கின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியில் இருக்கின்றமை அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். அதேபோல் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு இல்லை என்பதும் அரசுக்கு தெரியும். எனவே சிறுபான்மை மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதே அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இருக்கும் சவாலாகும்.

அதேபோல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதே அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப் பெரிய சவாலாகும். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவு யாருக்கு என்பதை இது வரையில் தெரிவிக்காதுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பது இந்த அரசாங்கத்தினால். வடக்கில் இராணுவ ஆட்சி நடத்தப்படுவது இந்த அரசாங்கத்தினால். எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதில் பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்துள்ளது. தற்போது பொது எதிரணியினை நாம் உருவாக்கி வருகின்றோம். இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் உதவிகளும் எமக்கு தேவைப்படுகின்றது.

அது மட்டுமன்றி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதும் எமது பொது எதிரணியின் ஒரு கோரிக்கையே. அதனை பலப்படுத்த தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply