பாகிஸ்தானில் மலாலாவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு

பாகிஸ்தானில் மலாலாவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர் மேற்கத்திய நாடுகளின் ஏஜெண்டு என புகார் கூறியுள்ளன. பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாய் (17). இவர் பெண் கல்வியை எதிர்க்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டார். எனவே அவர்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி உயிர் பிழைத்தார்.தற்போது லண்டனில் குடும்பத்துடன் தங்கியிருக்கும் அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.‘நான் மலாலா’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில் 2 ஆயிரம் ஆண்டுகளில் வடமேற்கு பாகிஸ்தானில் சுவாத் பள்ளத்தாக்கில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கொடுமைகளை தோலுரித்து காட்டியுள்ளார். அதில் சர்வதேச அளவில் பெண் குழந்தைகளின் கல்வி உரிமைகள் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

இப்புத்தகம் கடந்த ஆண்டு வெளியானது. உலக நாடுகள் மலாலாவின் இப்புத்தகத்தை வரவேற்றன. ஆனால் பாகிஸ்தானில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த புத்தகம் இங்கிலாந்து பத்திரிகையாளர் கிறிஸ்டினா லாம்ப் என்பவரின் உதவியுடன் எழுதப்பட்டுள்ளது. அதில் இங்கிலாந்து எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் வங்காள தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஆகியோரின் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனைத்து பாகிஸ்தான் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மிர்கா காஷிப் கூறும்போது, ‘‘சல்மான் ருஷ்டி மற்றும் தஸ்லிமாவுக்கு பற்று உள்ளது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

சல்மான் ருஷ்டியின் கருத்துக்களுடன் இவரது கருத்துகளும் ஒத்து போகிறது. இவர் பாகிஸ்தானுக்கு எதிரானவர். இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கை கொண்டுள்ளார். மேற்கத்திய நாடுகளின் ஏஜெண்டு ஆக செயல்படுகிறார்’’ என தெரிவித்துள்ளார்.

மலாலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் நேற்று மலாலா எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இது குறித்து கருத்தரங்குகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தவும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply