5 தமிழக மீனவர்களுக்கு விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து: இலங்கை கோர்ட்டில் இந்தியா மேல்முறையீடு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்கள் எமர்சன் (வயது 35), அகஸ்டஸ் (35), வில்சன் (40), பிரசாத் (30), லாங்லெட் (22). மீனவர்களான இவர்கள், 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கையில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் இலங்கை மீனவர்கள் மூவரும் பிடிபட்டனர்.இவர்கள் மீதான வழக்கை கொழும்பு ஐகோர்ட்டு நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனா விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த 30-ந் தேதி தீர்ப்பு அளித்தார். அத்துடன் மேல்-முறையீடு செய்வதற்கு 14-ந் தேதி வரை அவர் அவகாசமும் வழங்கினார்.

இந்த தீர்ப்பு, தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் பெருத்த சோகத்தையும், தமிழகம் எங்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தீர்ப்புக்கு எதிராக பரவலாக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டன. 5 மீனவர்கள் மீதான மரண தண்டனையை எதிர்த்து மேல்-முறையீடு செய்ய கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு, அப்பீல் வழக்கின் செலவுக்காக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடந்த 8-ந் தேதி ரூ.20 லட்சம் அனுப்பி வைத்தது இந்த நிலையில், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்புக்கு எதிராக இலங்கை அப்பீல் கோர்ட்டில் இந்திய தூதரகத்தின் சார்பில் நேற்று மேல்-முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை தமிழக மீனவர்கள் சார்பில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் அனில் சில்வா உறுதி செய்தார். இதுபற்றி நேற்று அவர் கூறும்போது, “தமிழக மீனவர்கள் மீதான தண்டனையை எதிர்த்து மேல்-முறையீட்டு மனுவை 10-ந் தேதியே தாக்கல் செய்ய எண்ணி இருந்தோம். ஆனால் அந்த மனுவை இந்திய தூதரகம் பார்க்க விரும்பியது. இப்போது அதைப் பார்த்து ஒப்புதல் வழங்கி விட்டனர். அதைத் தொடர்ந்து இன்று (நேற்று) அப்பீல் மனுவை தாக்கல் செய்தோம். அப்பீல் மனுவின் விசாரணை தேதியை கோர்ட்டு முடிவு செய்யும்” என தெரிவித்தார்.

இந்த தகவல்களை நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் உறுதி செய்தார். முன்னதாக மியான்மர் நாட்டில் உள்ள நே பி தா நகரில் ஆசியான், கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன், அங்கு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “5 இந்திய மீனவர்களையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு வரும் வகையில் நாங்கள் மேல்-முறையீடு செய்கிறோம். இந்த பிரச்சினையில் நாங்கள் மிக அதிகமான முக்கியத்துவம் அளிக்கிறோம். மீனவர்கள் இந்தியாவுக்கு பத்திரமாக திரும்ப என்ன வகையான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையெல்லாம் நாங்கள் தீரஆராய்ந்து வருகிறோம். இலங்கை சட்டப்படியும், அந்த நாட்டு அரசின் நிர்வாக நடைமுறைக்கு ஏற்பவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறினார்.

ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரையும் தமிழக சிறைக்கு மாற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply