தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கருணாநிதிதான் முதல்–அமைச்சர்: மு.க.ஸ்டாலின் பேச்சு
காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுந்தர் மகள் பொற்செல்வி – ராஜராஜன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடந்தது. காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். இந்த திருமணத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:–தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் சுந்தர் மகள் பொற்செல்வி– ராஜராஜன் திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இது சீர்திருத்த திருமணம். சீர்திருத்த திருமணத்தை யாரும் இப்போது ஆச்சர்யத்துடன் பார்ப்பது இல்லை. வைதீக திருமணம் நடைபெறுவதைத்தான் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
அண்ணா முதல்– அமைச்சராக இருந்தபோது தான் சீர்திருத்த திருமணம் செல்லுபடியாகும் என்று சட்ட வடிவம் தந்தார். இன்று ஏராளமானோர் சீர்திருத்த திருமணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
உத்திரமேரூர் தொகுதியில் சுந்தர் 3 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். இதே தொகுதியை பற்றி ஜெகத்ரட்சகன், பொன்.குமார், ஆகியோர் அங்கு நிற்க வேண்டும் என்ற ஆசையில் பாராட்டி பேசினார்கள். இந்த போட்டியில் நானும் பங்கேற்கலாமா என்ற ஆசை வருகிறது. அந்த அளவுக்கு தி.மு.க.வுக்கு பெருமையையும், கலைஞருக்கு சிறப்பையும் சுந்தர் உருவாக்கி தந்துள்ளார்.
பொன்குமார் பேசும் போது, தமிழ்நாட்டில் எதுவும் நடைபெறவில்லை. அ.தி.மு.க.வினரே நிம்மதியாக இல்லை என்று குறிப்பிட்டார். சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு நான் பேட்டியளித்தபோது அந்த நிருபர் என்னிடம் புதிய முதல்வர் பன்னீர்செல்வம் பற்றி ஏதாவது கருத்து சொல்ல முடியுமா? என்றார்.
நான் பதில் அளிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் நல்லவர். அவர் வல்லவரா என்பது போகப் போகத்தெரியும் என்று குறிப்பிட்டேன். அந்த பன்னீர்செல்வம் இப்போது மட்டரகமான அறிக்கை வெளியிடுகிறார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கலைஞரை நானும் துரைமுருகனும் சந்தித்து பேசினோம். அப்போது துரைமுருகன் ஒரு கருத்தை கூறினார். புதிய முதல்– அமைச்சர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார். மாநிலத்தில் எவ்வளவோ பிரச்சினை உள்ளது. பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு இதையும் தாண்டி 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதித்த சம்பவங்கள் உள்ளன. தூக்குத் தண்டனையை தடுக்க கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்காக குளிர்கால கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்று பேசிக் கொண்டோம்.
அப்போது தலைவர் கலைஞர் ஒரு அறிக்கை வெளியிட ஆணையிட்டார். சட்டமன்ற தி.மு.க. கட்சி தலைவராக இருப்பதால் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டேன்.
அதுவந்த மறுநாள் முதல் – அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மன்னிக்க வேண்டும். ஜீரோ பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சட்ட மன்றத்தை கூட்டுவதை பற்றி தி.மு.க. கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறி இருக்கலாம்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி எனக்கும் தலைவர் கலைஞருக்கும் தகராறு இருப்பது போலவும், தலைவர் பதவியை பிடிக்க நான் அறிக்கை விடுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இப்படி அவர் கூறியதால்தான் மறுப்பு தெரிவித்து நீண்ட அறிக்கை வெளியிட்டேன்.
தி.மு.க.வுக்கு என்றைக்கும் கலைஞர்தான் நிரந்தர தலைவர். ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும் தலைவர் கலைஞர்தான் முதல்–அமைச்சர் என்று பலமுறை கூறி இருக்கிறேன். எல்லோரும் இதே கருத்தை தான் பேசுகிறோம்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ஆதாயத்துக்காக எனது அறிக்கையை கொச்சைப்படுத்தி பேசியதால் தான் அதற்கு விளக்கம் தெரிவித்தேன். புதிய முதல்– அமைச்சராக இன்று ஆட்சி நடத்தும் ஓ.பன்னீர்செல்வம் அறையில் கூட அவரது படம் இல்லை.
அறை வாசலில் நிதி அமைச்சர் என்ற போர்டு தான் இன்னும் உள்ளது. குற்றவாளியாக கோர்ட்டில் தண்டிக்கப்பட்ட அம்மையார் படம்தான் அங்கு உள்ளது.
முதல்–அமைச்சர் அறையில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தால் பணியாற்ற முடிய வில்லை. இதைவிட வெட்கக்கேடு என்னவாக இருக்க முடியும்.
இதை தமிழக மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் ஜனநாயகம் தழைக்க, தலைவர் கலைஞர் ஆட்சி உருவாக சபதம் ஏற்போம்.
திருமணத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர். வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:–
தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஜெகத் ரட்சகன், தி.மு.க. அமைப்பாளர் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, வைத்தியலிங்கம், காந்தி, பல்லாவரம் நகர செயலாளர் இ.கருணாநிதி, சன்பிராண்ட் ஆறுமுகம், பொன்.குமார், வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், மல்லிகா மோகன், மாடம்பாக்கம் எல்.எஸ்.எஸ்.மோகன் உள்பட ஏராளமானோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply