எமது ஆதரவைக் கோரும் வேட்பாளர்கள் தீர்மானம் மிக்க பதிலை வழங்கவேண்டும் :சுரேஸ் பிரேமச்சந்திரன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது ஆதரவைக் கோரும் வேட்பாளர்கள் நாம் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் மிகத் தெளிவான தீர்மானமிக்க பதிலை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள இன்றைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எமக்கு இன்றும் தெரியாது. ஆயினும் வேட்பாளர்கள் யாராக இருப்பினும் எமது தமிழ் மக்களின் வாக்கு பலத்தினை பெற விரும்புவோர் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் தீர்மானமிக்க பதிலை எமது மக்கள் சார்பாக நாம் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியபடு இயக்கம் நடாத்திய ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
தொடர்ந்து தமது ஆட்சியை இந்த நாட்டில் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக எமது ஆதரவை கோறும் அரசாங்கம் யுத்தம் முடிவுற்று 5 வருடங்கள் ஆகியும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. மாறாக முப்படைகளின் மூலம் தமிழ் மக்களின் நிலங்களை தொடர்ந்து சூறையாடுகிறது. எனவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நாம் முன்வைக்கின்ற வினாக்களுக்கு தெளிவான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்களுக்கு சொந்தமான 65,000 ஏக்கர் நிலப்பரப்பினை ஏற்கனவே கபளீகரம் செய்துள்ள அரசாங்கம் இன்று காங்கேசன்துறை மாதகல் எனும் இடத்தில் 75 மீனவர்களின் மீனவ படகுகள் இழுக்கப்படும் இடத்தினை கடற்படையினர் மூலம் அபகரித்துள்ளது.
இதனால் மீனவர்களின் படகுகள் கடுமையான காற்றுடன் கூடிய கால நிலைக்கு மத்தியில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் சேதமடைகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்களின் முழு வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. 75 குடும்பங்கள் இன்று வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். தமிழ் மக்களின் வாக்கு பலத்தினை பெற விரும்பும் இந்த அரசாங்கம் சாதாரண மீனவர்களின் நிலத்தைக் கூட விட்டு வைக்கவில்லை.
இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படாமல் இந்தியாவிலும் முகாம்களிலும் உள்ளனர். அவர்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய முடியுமா? தமிழ் மக்களை மீள்குடியேற்றினால் பெரும்பான்மை மக்களின் வாக்கு பலத்தினை இழந்து விடுவோம் என்று அஞ்சதேவையில்லை. ஏனெனில் நாம் கேட்பது சிங்கள மக்களின் நிலத்தினை அல்ல, தலைமுறை தலைமுறையாக நாம் வாழ்ந்த எமது சொந்த நிலத்தினையே கேட்கிறோம். இதனால் சிங்கள மக்கள் எந்த வகையிலும் பாதிப்படைய மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் இந்த மீள்குடியேற்றத்தினை ஏற்றுக் கொள்வார்கள்.
மேலும், இன்று வடக்கில் சிவில் நிர்வாக கட்டமைப்பு என்ற ஒன்று இல்லை. மாறாக இராணுவ கட்டமைப்பே நிலவுகிறது. பாலர் பாடசாலைகளின் ஆசிரியர் நியமனம் முதல் சிகை அலங்கார கடைகள் வரை அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது. இன்று ஊடக கற்கை நெறிகளை கூட வடக்கில் இராணுவம் நடத்துகிறது. இந்த நிலை மாற வேண்டும். சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதனை முற்றாக தடை செய்ய வேண்டும்.
முப்படைகளை வெளியேற்றி மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியுமா?
எந்தவித குற்றசெயலிலும் ஈடுபடாமல் 10, 15 வருடங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமா?
இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் எமக்கு தெளிவாக கூற வேண்டும். நாம் பிரேமதாஸ காலத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வரை பேச்சுவார்த்தை நடாத்தி நம்பிக்கை இழந்துள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாஸ சந்திரக்கா பண்டாரநாயக்க குமார துங்க மற்றும் தற்போதைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துடன் 18 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அனைவருமே தீர்வு திட்டங்கள் தொடர்பில் பேசினார்கள். ஆனால், எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இது தொடர்பில் எமக்கு தெளிவான ஒரு பதிலை வழங்க வேண்டும்.
யுத்தம் முடிவுற்ற பின்னர் நாம் பாரிய அளவில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். எமது வழிபாட்டு தலங்கள் கூட உடைக்கப்படுகின்றன. பள்ளியிலோ கோயிலிலோ வழிபாடுகள் நடத்த முடியாத நிலையில் நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, இனியும் முட்டாள்களாகவே இருக்க முடியாது.
கொழும்பிற்கு ஊடக பயிற்சி பெற வந்த எமது மாணவர்கள் தாக்கப்பட்டனர். ஆனால், இன்று வடக்கில் இராணுவம் ஊடாக கற்கை பயிற்சிகளை வழங்குகிறது. இந்த இராணுவமயமாக்கம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்துகிறது. இது வடக்கிற்கு மட்டும் அல்ல முழு நாட்டிற்கும் தெற்கிற்கும் ஆபத்தானது.
இன்றைய சூழ்நிலையில் மிகவும் துர்பாக்கிய நிலையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஒரு நிலையான தீர்வு வேண்டும். எனவே மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் எமது எதிர்பார்ப்பு உள்ளது. எமது இக்கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாட்டினை எதிர்பார்க்கின்றோம் பிரதானமாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply