மியான்மர் நாட்டில் உலக தலைவர்களுடன் நரேந்திர மோடி சந்திப்பு

மியான்மர் நாட்டில் சீன பிரதமர் லீ கேகியாங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை நரேந்திர மோடி சந்தித்து பேசினார். மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளுக்கு 10 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்று உள்ளார். முதல் கட்டமாக, இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மருக்கு சென்றார். அங்குள்ள நே பி தா நகரில் இம்மாநாடுகள் நடைபெற்றன.
மாநாட்டுக்கு வந்திருந்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அங்கு அவர் சந்தித்து பேசினார். நே பி தா நகரில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மலேசிய பிரதமர் முகமது நஜிப்பையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வதேவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பின் போது, இந்தியா எங்களுடைய நெருங்கிய மற்றும் மதிப்புமிக்க தோழமை நாடு என்று ரஷிய பிரதமர் புகழாரம் சூட்டினார். 15-வது இந்திய-ரஷிய உச்சி மாநாட்டுக்காக, ரஷிய அதிபர் புதின் அடுத்த மாதம் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கடந்த ஜூலை மாதம் பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் சந்தித்து பேசினர். அப்போது கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் செயல்படுத்தப்பட்டு உள்ள அணுமின் திட்டத்தை பார்வையிட வருமாறு புதினுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

மாநாட்டுக்கு வந்துள்ள சீன பிரதமர் லீ கேகியாங்கை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். மோடி பிரதமராக பதவி ஏற்றபோது முதலாவதாக வாழ்த்திய உலக தலைவர்களில் லீ கேகியாங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய சந்திப்பின்போது, கடந்த செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய வருகை குறித்து மோடி நினைவுபடுத்தினார். அந்த வருகை மறக்க முடியாதது என்று அவர் கூறினார்.

அவரது கருத்துக்கு பதில் அளித்த சீன பிரதமர் லீ கேகியாங், சீன அதிபரின் பயணம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்து விட்டதாக கூறினார்.

அதே சமயத்தில், மோடியை சீனாவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். மோடியை வரவேற்க சீனா ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் பெனிக்னோ அகுய்னோ, நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ, ஆகியோரையும் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேசினார்.

மியான்மர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

பிரிஸ்பேன் நகரில் நடக்கும் ஜி௨0 உச்சி மாநாட்டின்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நரேந்திர மோடி மீண்டும் சந்திக்க உள்ளார். அப்போது, முந்தைய சந்திப்பின்போது ஏற்பட்ட நெருக்கத்தை இருவரும் வலுப்படுத்த உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply