தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை இரத்து! செந்தில் தொண்டமான்

இலங்கை நீதிமன்றத்தால் 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ உத்தரவிட்டிருப்பதாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர்நீதிமன்றம் 5 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தது. இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. மத்திய அரசோ, 5 மீனவர்களும் அப்பாவிகள்தான்.. அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.

பின்னர் இலங்கை நீதிமன்றத்தில் அங்குள்ள இந்திய தூதரகத்தால் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் ராஜபக்ஷவுடன் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து தொலைபேசியில் பேசியதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்குள்ள அதிகாரத்தின்படி 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருப்பதாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ´தந்தி´ தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உரிய உத்தரவை நீதித்துறைக்கு மஹிந்த ராஜபக்ஷ பிறப்பித்துள்ளார். இருப்பினும் இந்தியத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றால்தான் இது நடைமுறைக்கு வரும். இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply