எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் யார்? ரணிலா? சஜிதா? அல்லது பூதமா?

எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் யார்? ரணிலா? சஜிதா? அல்லது பூதமா? என்பதை எதிர்க்கட்சி வெளியிட வேண்டும். வேட்பாளர் ஒருவரை தேடிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியால் எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை கவிழ்க்க ஒரு போதும் துணைபோகமாட்டோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான வீடமைப்பு நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்;

அரசாங்கத்துடன் பங்காளிகளாக நாமிருக்கின்றோம். ஆனால், பல விடயங்கள் தொடர்பாக அரசுடன் கொள்கை ரீதியாக பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் அரசுடன் விவாதிப்போம். பிழைகளை சரி செய்து கொள்வோம்.

பிழையான பாதையில் அரசு செல்லுமானால் அதனை சரியான வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம். சரி செய்வோம்.

அரசுடனான பயணத்தை தொடருவோம். அதைவிடுத்து வங்குரோத்து அரசியல் நடத்தும் கொள்கையில்லாத எதிர்க்கட்சிகளுடன் இணைய மாட்டோம். ஒரு சிலரைப்போல் அரசைக் கவிழ்க்க நாம் துணை போகமாட்டோம். எதிர்க்கட்சிகளின் கனவு ஒரு போதும் நிறைவேறாது. அரசாங்கம் இன்று ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி விட்டது. எமது பக்கத்தில் வேட்பாளரும் தயாராகி விட்டார். ஆனால் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார்? பொது வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக இன்றுவரை தெரியாது.

ரணிலா? சஜிதா? அல்லது பூதமா? வேட்பாளர் என்பதை வெளியிடுங்கள். அரசு எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கவும் தயாராகி விட்டது.

எனவே, வேட்பாளரைக்கூட தெரிவு செய்ய முடியாத எதிர்க்கட்சியுடன் இணைவதா? இன்று 20 – 30 வருடங்களாக பெரும்பாலான மக்கள் சட்ட விரோதமாக குடியிருக்கின்றனர். அவர்களுக்கு சட்ட ரீதியான அந்தஸ்தை வழங்கி உறுதிகளையும் வழங்கியுள்ளோம்.

2011 க்கு பின்னர் ஒவ்வொரு வருடமும் 4 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு புதிதாக வீடுகளை கட்டுவதற்கு முன்னே கடன்களை வழங்குகின்றனர்.

தொடர்மாடி வீட்டுத்திட்டங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் சேரிகளில் வாழும் மக்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply