கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி: சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது
கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக ரூ.200 கோடி பண பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக மத்திய அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்காக ஆதாயம் தேடித்தரும் வகையில் கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக, மத்திய அமலாக்கப் பிரிவினர் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள், கலைஞர் டி.வி.யின் மேலாண்மை இயக்குனர் சரத்குமார் ரெட்டி, பி.அமிர்தம், சுவான் டெலிகாம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 10 தனி நபர்களின் பெயர்களும் மற்றும் சுவான் டெலிகாம், குசேகோன் ரியல்டி, சினியுக் மீடியா, கலைஞர் டி.வி., டைனமிக் ரியல்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, கோன்வுட் கன்ஸ்ட்ரக்சன் அண்ட் டெவலப்பர்ஸ், டி.பி.ரியல்டி, நிஹார் கன்ஸ்ட்ரக்சன் ஆகிய 9 நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்று உள்ளன.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேருக்கும் கலைஞர் டிவி, சுவான் டெலிகாம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
உடல்நிலை காரணமாக தனக்கு இந்த வழக்கில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை தனிக்கோர்ட்டு நிராகரித்து விட்டது.
அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான இருதரப்பு விசாரணைகளும் முடிவடைந்து கடந்த மாதம் 31-ந் தேதி நீதிபதி ஓ.பி.சைனி, பிறப்பித்த உத்தரவில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதும் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்றும், சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றம் இழைத்திருப்பதாகவும், எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 19 பேர் மீதும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 4-ன் கீழ் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய உத்தரவிடுவதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் நேற்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது.
வழக்கில் முக்கிய புகார் தாரரான அமலாக்கப்பிரிவின் இணை இயக்குனர் மான்சு குமார் லாலிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் சி.பி.ஐ. விசேஷ வக்கீல் ஆனந்த் குரோவர் விசாரணையை தொடங்கினார்.
மான்சு குமார்லால் தன்னுடைய சாட்சியத்தில் கூறியதாவது:-
நான் 2012-ம் ஆண்டு அமலாக்கப்பிரிவில் பணியில் சேர்ந்தேன். 2013-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி இந்த வழக் கின் மீதான விசாரணை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூல வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை தீவிரமாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அமலாக்கப்பிரிவின் இணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங் தலைமையில் துணை இயக்குனர் சத்தியேந்திர சிங் மற்றும் கமல்சிங் ஆகிய அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைக்கான மேற்பார்வை பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட்டேன். இந்த விசாரணையின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் கோர்ட்டில் புகார் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.ஐ. தரப்பு சிறப்பு வக்கீல் ஆனந்த் குரோவர், தான் சுப்ரீம் கோர்ட்டில் வேறொரு முக்கியமான வழக்கில் ஆஜராக வேண்டியிருந்ததால் தொடக்கத்திலேயே அரை மணி நேரம்தான் சாட்சியிடம் விசாரணையை மேற்கொள்வதற்கு நீதிபதியிடம் அனுமதி பெற்றிருந்தார்.
இதன் அடிப்படையில், நீதிபதி ஓ.பி.சைனி வழக்கின் மீதான விசாரணையை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்தி வைத்தார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அன்று கோர்ட்டில் ஆஜராகியிருக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
இதேபோல், 2ஜி மூல வழக்கின் எதிர்த்தரப்பு சாட்சியங்களின் பதிவுகள் முடிவடைந்த நிலையில் சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவில் அமலாக்கப்பிரிவின் துணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குனர் சத்யேந்திர சிங், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரி நவில் கபூர், வங்கி அதிகாரி டி.மணி மற்றும் கலைஞர் டிவியின் பொது மேலாளர் (நிதி) ஆகியோரிடம் மேலும் விசாரணை நடத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த மனுவின் மீதான இரு தரப்பின் இறுதி வாதங்களும் முடிவடைந்த நிலையில் சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
2ஜி முறைகேடு தொடர்பான மூல வழக்கின் மீதான இறுதி வாதங்கள் அடுத்தமாதம் (டிசம்பர்) 19-ந் தேதியன்று தொடங்கும் என்று கடந்த திங்கட்கிழமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தது, குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply