எபோலா நோய் பாதிப்பால் இதுவரை 5,420 பேர் உயிரிழந்துள்ளனர்
எபோலா நோய் பாதிப்பால் இதுவரை 5,420 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்த விவரம்: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் எபோலா நோய் அறிகுறி தென்படத் தொடங்கியது. இதையடுத்து, 8 நாடுகளில் இது வரை 15,145 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் 5,420 பேர் உயிரிழந்துள்ளனர்.பாதிப்படைந்தவர்களில் சராசரியாக 70 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக் கூடும்.
எபோலா நோய்த் தாக்கம் அதிகபட்சமாக இருந்த நாடான லைபீரியாவில் தற்போது, அதன் பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டின் தலைநகரில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை, தளர்த்தப்பட்டுள்ளது.
லைபீரியாவில் நவம்பர் 16-ஆம் தேதி அளவில், 7,069 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 2,964 பேர் உயிரிழந்தனர்.
சியரா லியோனில், 6,073 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,250 பேர் உயிரிழந்தனர். கினீ நாட்டில் 1,971 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,192 பேர் உயிரிழந்தனர்.
மாலியில் 6 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். நைஜீரியா, செனகல் நாடுகளில் புதிய எபோலா நோயாளிகள் எவரும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நோய் பாதிப்புள்ள பகுதிகளில் சிகிச்சையில் ஈடுபட்ட வந்த டாக்டர்கள் உள்ளிட்ட 568 மருத்துவ உதவியாளர்களுக்கு எபோலா நோய்த் தொற்று ஏற்பட்ட நிலையில், 329 பேர் உயிரிழந்தனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply