இந்திய பயணத்தின் போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச ஒபாமாவிடம் நவாஸ் செரீப் வற்புறுத்தல்
இந்திய பயணத்தின் போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச ஒபாமாவிடம் நவாஸ் செரீப் வற்புறுத்தியுள்ளார். வருகிற ஜனவரி 26–ந் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதை ஒபாமா ஏற்றுக்கொண்டார். இந்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பிடம் டெலிபோனில் ஒபாமா தெரிவித்தார்.அப்போது இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய சூழ்நிலைகள் குறித்து பேசினர். அப்போது கடந்த ஆண்டுதான் வாஷிங்டன் வந்த போது பாகிஸ்தானுக்கு வரும்படி ஒபாமாவுக்கு அழைப்பு விடுத்ததை நவாஸ் செரீப் நினைவு கூர்ந்தார்.
அதை தொடர்ந்து பாகிஸ்தானில் நிலைமை சீரடைந்ததும் விரைவில் பாகிஸ்தான் வர ஒபாமா ஒப்புக்கொண்டார்.
இந்திய வருகையின் போது காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்திய தலைவர்களிடம் ஒபாமா பேசும்படி நவாஸ் செரீப் வற்புறுத்தினார். அதன் மூலம் ஆசியா கண்டத்தில் அமைதி, ஸ்திர தன்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மேம்படும் என்றும் அவர் கூறினார்.
உறவு மேம்படுவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் இந்தியா சென்றதாகவும், துரதிர்ஷ்டவசமாக வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தினால் ஆன பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதையும், காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் பொது மக்கள் பலியானதையும் செரீப் எடுத்து கூறினார்.
மேலும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான சூழ்நிலை உருவாக பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும், நவாஸ் செரீப் கூறினார். அதைதான் கவனத்தில் கொள்வதாக ஒபாமா கூறினார். இந்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இவை தவிர பாகிஸ்தான்– ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு மேம்பட்டிருப்பது குறித்தும் அதிபர் அஷ்ரப் கானியின் இஸ்லாமாபாத் வருகை குறித்தும் ஒபாமாவிடம் நவாஸ் செரீப் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply