ஆஸ்திரேலியாவில் 8 சிறுவர்கள் கொலை: தாய் கைது

ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில், ஒன்றரை முதல் 15 வயது வரையிலான 8 சிறுவர்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட விவகாரத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டார். சம்பவம் நடைபெற்ற அந்தக் குடியிருப்பிலிருந்து கத்திக் குத்துக் காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தப் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், புலன் விசாரணை அதிகாரி புரூனோ அஸ்னிகார் கூறியதாவது:

கொல்லப்பட்ட குழந்தைகளின் 37 வயது தாயை, கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளோம்.

அவர் தற்போது கேர்ன்ஸ் மருத்துவமனையில் போலீஸ் காவலில் உள்ளார் என்றார் அவர்.

எனினும், அந்தப் பெண்மணிக்கு ஏற்பட்ட கத்திக் காயம், சுயமாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதா என்பது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை.

இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற குடியிருப்புக்கு அருகில் தாற்காலிகமாக அமைக்கப்பட்ட நினைவகத்தில் பொதுமக்கள் மலர்களையும், பொம்மைகளையும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த குழந்தைகள், ஆஸ்திரேலிய பூர்வகுடியினரான “டாரஸ் ஸ்டிரெய்ட் ஐலாண்டர்’ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெயர்கள் வெளியிடப்படவில்லை.

அந்தச் சமூகத்தில், உயிரிழந்தவர்களின் பெயர்களைக் கூறுவது அவர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை என நம்பப்படுகிறது.

இந்நிலையில், 2, 11, 12, 14 வயதுடைய பெண் குழந்தைகளும், 5, 6, 8, 9 வயதுடைய ஆண் குழந்தைகளும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சிட்னி நகர உணவகம் ஒன்றில் மத அடிப்படைவாதி ஒருவர் பிணைக் கைதிகளை சிறை பிடித்து வைத்திருந்த சம்பவத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் இரு பிணைக் கைதிகளும் உயிரிழந்தனர்.

அந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், தற்போது 8 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் ஆஸ்திரேலியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply