ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள விரும்பம் தெரிவிப்பு
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள அரசின் அனுமதிக்காகத் தாம் காத்திருப்பதாக நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு வழங்கிய மின்னஞ்சல் மூலமான செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலவரம் தொடர்பாக ஆராய்ந்து, பேச்சு நடத்துவதே எனது இந்த பயணத்தின் நோக்கம். இலங்கைக்குப் பயணம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே தெளிவாக அந்த அரசிடம் அறிவித்து விட்டேன். தற்போது இலங்கை அரசின் அனுமதிக்காகவே காத்திருக்கின்றேன்.
வடக்கு மற்றும் கிழக்கில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதுடன் மக்கள் மத்தியில் நெருக்கடி நிலை மோசமடைந்து வருவதாக அறிய முடிகின்றது.
இரு தரப்பு மோதல்களினால் பல அவலங்களை அனுபவித்து வரும் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமானம் தொடர்பிலான நடவடிக்கைகளைப் பேண வேண்டியது அவசியம். இன்றைய நாளில் இது முக்கியமானதுடன் அத்தியாவசியமுமானது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்று குற்றஞ்சாட்டுவது தவறானது.ஆத்துடன் ஒரு தரப்பின் மீது குற்றம் சுமத்துவது மற்றத்தரப்பினை நியாயப்படுத்துவதாக அமையாது” எனவும் பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply