அரசுக்கும் ஜனாதிபதிக்கும் ரிசாட் நயவஞ்சகம் செய்துவிட்டார் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் தலைகுனிவு :ஏ.எச்.எம். அஸ்வர்
அரசாங்கத்தில் இருந்த வரைக்கும் ‘ராஜா’ அந்தஸ்தினை அனுபவித்து வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதியவர்களுக்கும் நயவஞ்சகம் புரிந்து விட்டதாக தகவல் தொடர்பாடல் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் கூறினார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இழைத்துள்ள துரோகமானது, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கே அவமானத்தையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியிருப்பதாக சுட்டிக் காட்டிய அஸ்வர், முஸ்லிம் சமூகம் சார்பில் தான் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார்.
தகவல் தொடர்பாடல் திணைக்களத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ரிஷாட் பதியுதீன் மீள்குடியேற்றத்துக் கான அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். மன்னார், வன்னி மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக் கைகளை முன்னெடுப்பதற்காக இவரிடம் பெருந்தொகையான பணம் கையளிக்கப் பட்டிருந்தது. அப்போது அவரால் முன் வைக்கப்பட்ட உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் செய்து கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைத்தொழில் வாணிப அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு ராஜாவைப் போன்றே அவர் அரசாங்கத்தில் இருந்தார். வேறெந்த முஸ்லிம் அரசியல்வாதியும் அனுபவிக் காததை அவர் அனுபவித்து வந்த நிலையில், இவ்வாறான தொரு தீர்மானத்தை மேற்கொள்வாரென நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
அமீர் அலிக்காக நான் எனது பாராளுமன்ற ஆசனத்தையே விட்டுக் கொடுத்தேன். ஆனால் அவர் ஒரு நாள் மாத்திரமே பாராளுமன்றம் வந்து சென்றார். இவரது நடவடிக்கையும் ஒரு முஸ்லிமாக எனக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ரிஷாட் பதியுதீன் மற்றும் அமீர் அலி மேற்கொண்ட துரோகச் செயலினால் முஸ்லிம் சமூகத்திற்கே ஆவமானம் ஏற்பட்டுள்ள தெனவும் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
மேலும், தான் அமீர் அலிக்காக தனது ஆசனத்தை தியாகம் செய்யவில்லை. ஜனாதிபதி தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென்பதற்காகவே தனது ஆசனத்தை விட்டுக் கொடுத்ததாகவும் அவர் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எதிரணியினர் இனவாதிகள், முஸ்லிம் விரோதிகளெனவும் அவர் தெரிவித்தார். இவர்களுடன் கூட்டு சேர ரிஷாட் மற்றும் அமீர் அலி எடுத்த முடிவு முட்டாள்தனமானதெனவும் அவர் விளக்கினார்.
இது தொடர்பில் ஏ.எச்.எம். அஸ்வர் மேலும் தெரிவித்ததாவது,
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர். பொலன்னறுவை மெதிரிகிரியவில் அவரது நெல் குத்தும் ஆலையிலிருந்து ஒரே நாளில் 53 பேரை வேளையிலிருந்து நீக்கி வீதியில் இறக்கியவர். இவரை எந்தவொரு தமிழ், முஸ்லிம் நிகழ்விலோ அல்லது புத்தக விழாவிலாவது கண்டிருக்க முடியுமா? இவர் இனத்துவேசம் மிகுந்தவர் என தெரிந்திருந்த போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சக்திவாய்ந்த செயலாளர் பதவியிலிருந்தமையினால் நாம் அது குறித்து எதுவும் பேசாமல் இருந்தோம்.
சரத் பொன்சேகா, இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இடமில்லை, அவர்கள் வந்தேறு குடிகள் என்றார்.
சம்பிக்க ரணவக்க 09 ம் திகதி பெளத்த இராச்சியமொன்றை உருவாக்கப் போவதாக கூறியுள்ளார்.
இவ்வாறாக இனவாதிகள் ஏழு பேர் சேர்ந்து அரசியல் கட்சியல்ல உனக்குப்பாதி, எனக்குப்பாதியென மீன் வியாபாரத்தையே மேற்கொள்கின்றனர். இதில் முஸ்லிம்கள் ஏமாந்துவிடக் கூடாது.
மூன்றாவது தடவையும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 25 இலட்ச மேலதிக வாக்குளால் அமோக வெற்றிப் பெறுவார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply