சந்திரிகா – சம்பந்தன், சம்பிக்க – உருத்திரகுமார் ஒப்பந்தம் என போலி ஆவணங்களை வெளியிட சதி
சந்திரிகா–சம்பந்தன், சம்பிக்க– உருத்திரகுமார் ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக போலியான ஆவணத்தை மக்களிடம் வெளியிட அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. பொது வேட்பாளருக்கு ஆதரவாக உள்ள பிக்குகளுக்கு எதிராக சேறுபூசவும் சதித் திட்டம் தீட்டப்பட்டுவருகின்றது என்று குற்றம் சுமத்திய ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எதிரணி மீது போலியான முறையில் சேறு பூசினாலும் எமது பயணத்தை தடுக்க இயலாது. அத்தகைய போலியான ஆவணங்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது எனவும் அவர் கோரினார்.கொழும்பிலுள்ள பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் ஊழல் மோசடி அதிகரித்துள்ளது. இதனூடாக மக்களுடைய பணம் சூறையாடப்படுகிறது. அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் பணம் சூறையாடப்பட்டு வருகிறது.
இந்த அரசாங்கத்திடம் பல தடவைகள் நாம் இது தொடர்பில் தைரியமாக சுட்டிக்காட்டினோம். எனினும் எந்தவொரு நடவடிக்கையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எடுக்கவில்லை.
இதனால் வெளிநாடுகளிடமிருந்து கடன் பெறும் தொகை அதிகரித்த வண்ணமுள்ளன. முழு நாட்டு மக்களும் கடனாளியாக உள்ளனர். எனினும் மெகடில் கொள்கைகளினுடாக மக்களுடைய பணங்கள் சூறையாடப்பட்டு வருகிறது.
மேலும் 2013 ஆம் ஆண்டு நாட்டில் வாழும் அப்பாவி குடும்பங்களுக்கு செல்ல வேண்டிய 700 பில்லியன் ரூபா பணத்தொகை காணாமல் போயுள்ளது. இவையனைத்தும் சாதாரண மக்களுக்கு சொந்தமான பணம். குறித்த பணத்தொகை நாட்டில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் சென்றடைய வேண்டியவை. தற்போது இவை காணாமல் போயுள்ளன.
மேலும் மேற்படி தொகை மதிப்பீட்டிற்கு அமைய ஒரு குடும்பத்திற்கு சொந்தமான 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவே காணாமல் போயுள்ளது. இது தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்ட பாரிய கொள்ளையாகும்.
இந்த கொள்ளைக்கு இந்த அரசாங்கம் பொறுப்பு கூறியே ஆக வேண்டும்.
போலியான ஒப்பந்தக்கதை
இதேவேளை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய ஆளும் தரப்பினர் பல்வேறு போலியான கதைகளை மக்களிடம் இட்டு கட்டி வருகின்றனர். இதன்படி அண்மையில் ரணில் – மைத்திரி ஒப்பந்தம் என்று போலியான முறையில் கதை கூறுகின்றனர். எனினும் அது போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் செயலாகும்.
இந்நிலையில் தற்போது தனக்கும் நாடு கடந்த தமிழ் ஈழத்தின் உருத்திரகுமாருக்குமிடையே ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டிருப்பதாகவும் அத்தோடு இரா சம்பந்தனுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையிலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக மக்களிடம் போலியான கருத்தை முன்வைக்கும் வகையில் போலியான ஆவணத்தை தற்போது தயாரித்தும் அரசு எதிரணியின் தேர்தல் பிரசாரத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்து வருகிறது.
அத்தோடு எதிரணி பொது வேட்பாளரிற்கு ஆதரவாக செயற்படும் பிக்குகள் மீதும் சேறு பூச ஆவணம் தயார் செய்து வருகிறது. எனினும் இதற்கு ஒரு போதும் நாம் அஞ்சப்போவதில்லை. எமது தேர்தல் பயணம் தொடர்ந்தும் வெற்றி பாதையை நோக்கி பயணிக்கிறது.பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply