தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையின்படி வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது : அரசாங்கம்
இலங்கைக்கு வெளியில் விடுதலைப் புலிகளின் பலமானதொரு அரசியல் களம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் வடக்கில் இருந்து ஒருபோதும் இராணுவத்தை வெளியேற்ற முடியாது என தெரிவிக்கும் அரசாங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை எமது அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டது.அரசாங்கத்தினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து யுத்தத்திற்கு பின்னரான இரண்டு ஆண்டு காலப் பகுதிவரை வடக்கில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும் இன்று இராணுவத்தில் ஐம்பது வீதத்திற்கும் மேலான இராணுவத்தினரை வடக்கில் இருந்து வெளியேற்றியுள்ளோம். தற்போது ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுத்தினர் கூட அங்கு இல்லை. நாம் யுத்த காலத்தில் நடந்து கொண்டதைப் போல் இன்று நடந்து கொள்ளவில்லை. அப்போதைய சூழ்நிலையில் வடக்கிற்கு அதிக பாதுகாப்பு தேவைப்பட்டது. அதே போல் வடக்கை போர் சூழலில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தி செய்ய இராணுவத்தின் உதவியே பிரதானமானது. ஆனால் இன்று அவ்வாறானதொரு நிலைமை இல்லாததன் காரணத்தினால்தான் இராணுவத்தை வெளியேற்றியுள்ளோம்.
கூட்டமைப்பின் கோரிக்கை தவறானது
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் இருந்து முழுமையான இராணுவத்தையும் வெளியேற்ற வேண்டும் எனவும் பொலிஸ் அதிகாரம் தமக்கு வேண்டும் எனவும் கூறுகின்றனர். வடக்கில் யுத்தம் ஆரம்பிக்க ஏதுவான காரணியாக எது இருந்ததோ அதையே கூட்டமைப்பு தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகின்றது. இதனை ஒருபோதும் எம்மால் அனுமதிக்கவோ அல்லது இவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொடுக்க முடியாது.
ரணில் – மைத்திரி கூட்டணியின் சாத்தியம்
ஆயினும் கூட்டமைப்பின் தனி நாட்டுக் கோரிக்கையினை பொது எதிரணியின் கூட்டணியில் பெற்றுக்கொள்வதே சாத்தியமாக உள்ளது. இன்று பொது எதிரணி தயாரித்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன சொல்வதைப் போல் வடக்கில் இருந்து ஐம்பது வீதமான இராணுவத்தினை வெளியேற்றுவதாக சொல்வது முழுமையாகவே வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு சமமானது. ஏனெனில் நாம் தற்போது வடக்கில் இருந்து ஐம்பது வீதமான இராணுவத்தினை வெளியேற்றியுள்ளோம். எனவே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான அரசியல் சூழ்நிலையினை நாட்டில் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
புலிகளின் வலுவான அரசியல்
இலங்கைக்கு வெளியில் விடுதலைப் புலிகளின் பலமானதொரு அரசியல் களம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின் உதவியுடன் விடுதலைப் புலிகளை மீளவும் உயிர்ப்பிக்க கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அவர்கள் இலங்கையில் மீண்டுமொரு அசாதாரண சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர். இதற்கு சாதகமான அரசியல் சூழலை பொது எதிரணி உருவாக்கிக் கொடுக்க முயற்சிக்கின்றமையினை தடுக்கவே நாம் முயற்சிக்கின்றோம்.
இராணுவத்தை வெளியேற்ற முடியாது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எந்தவொரு செயற்பாட்டினையும் நாம் செய்து கொடுக்க மாட்டோம்.
வடக்கில் தேவையான அளவு இராணுவம் வெளியேற்றப்பட்டு வடக்கு மக்களின் காணிகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இனிமேலும் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply