வன்னி மாவட்டத்தை புறக்கணிக்க மாட்டோம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்
தனிமனிதன் செய்த தவறுக்காக முழு மாவட்ட மக்களையும் தண்டிக்க நாம் தயாரில்லை வன்னி மாவட்டத்திற்கான அபிவிருத்திகள் தொடர்ந்தும் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுமென ஊடகத்துறைக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் தெரிவித்தார். வன்னி ஜும்ஆ பள்ளிவாசல், மடுகந்த வித்தியாலயம், ரம்பைக்குளம் உட்பட பல பகுதிகளிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவளித்து நடத்தப்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்களில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில், தம்பி ரிஷாத் பதியுத்தீன் ஒரு நல்லவர். அதனால்தான் அரசாங்கம் அவர் கேட்ட உதவிகளை எல்லாம் அரசு வழங்கியது.அதிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய உதவிகளை வன்னி மக்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். எனினும் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சர்வதேச ரீதியில் பின்னப்படும் சதி வலையில் அவர் இப்போது சிக்கியுள்ளார்.
இதனை செய்தவர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க. அமெரிக்க ஏகாதிபத்தியம், நோர்வே, சி.ஐ.ஏ. மொஸாத், இஸ்ரவேலர்கள் போன்ற சர்வதேச பரம முஸ்லிம் விரோத சக்திகளின் உற்ற தோழன் ரணில் என்பது உலகமறிந்த விடயம். அவர் வலையில் சிக்கினால் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் பயங்கர விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரும். ஈராக், லிபியா, சிரியா, எகிப்து போன்ற நாடுகளின் அரும்பெரும் தலைவர்களை அரபு வசந்தம் என்ற பெயரில் அழித்துவிட்டது ஏகாதிபத்திய அமெரிக்கா தான் என்பதை உலகறியும்.
சதாம் ஹுசைன், முஹம்மத் கத்தாபி போன்றவர்கள் உலக முஸ்லிம்களுடைய எழுச்சிக்காக வேண்டி உழைத்தவர்கள். உதவிகளை செய்தவர்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட எகிப்தின் ஜனாதிபதி இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முர்ஷியை வீழ்த்தியவர்கள் இந்த ஏகாதிபத்திய வாதிகள். இவர்களின் உற்ற தோழன் ரணில் விக்கிரமசிங்கவோடு நாம் எந்த முறையில் தோழமை கொள்ள முடியும். முஸ்லிம்கள் இதனை நிதானமாக சிந்தித்து பார்க்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பதை நாம் நன்கு அறிவோம். ஜனாதிபதியுடனும் கோதாபய ராஜபக்ஷ உடனும் பேச்சு வார்த்தைகள் நடாத்தி, அதில் நல்ல முடிவு எட்டப்பட்டதாக ரிஷாத் பதியுத்தீன் அறிவித்திருந்தார். சீனக்குடா கருமலையூற்று பள்ளிவாசலில் தொழுவதற்கு வசதி செய்து தருமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுக்கும் படி அவர் கோதாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கிணங்க முஸ்லிம்கள் தொழுவதற்கு வசதிகளை அவர் செய்து கொடுத்ததாக ரிஷாத் அவர்களே அறிவித்திருந்தார். சென்ற வெள்ளிக்கிழமை இப்பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையும் நன்றே நடைபெற்றது. ஒரு இமாமும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பல காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ரிஷாத் வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு செயலாளர் உடனடி தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இதனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இறுதிவரை ஆதரிப்பதாக தமது கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள் ளதாகவும் அவர் பிரகடனம் செய்தார்.
நம்பிக்கைத் துரோகம் செய்வது இஸ்லாத்தில் மாபெரிய குற்றமாகும். இது படுமோசமான நயவஞ்சகத்தனம். மேலும் பிரச்சினை இருந்தால் அவர் முன்னரேயே அரசாங்கத்துடனான தொடர்பை அறுத்திருக்க வேண்டும். அத்தனை உதவிகளையும் பெற்று மிக முக்கியமான வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் பல நன்மைகளை பெற்றுக் கொண்டு, முஸ்லிம் நாடுகளுக்கு சென்று பல அனுகூலங்கள் பெற்று இறுதியாக இப்படியாக நடந்து கொண்டது இஸ்லாமல்ல. முஸ்லிம்களுடைய பண்பும் அல்ல.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply