மாயமான மலேசிய விமானத்தின் உதிரிபாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு: இந்தோனேஷிய விமானப்படை தளபதி தகவல்
155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம் ஒன்று சிங்கப்பூர் நகருக்கு நேற்று முன்தினம் காலை 5.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் காலை 8.30 மணிக்கு சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்தை சென்று தரையிறங்கி இருக்கவேண்டும். ஆனால், சுரபவா நகரில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது 6.24 மணிக்கு விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமானம் முற்றிலுமாக இழந்தது. இதைத் தொடர்ந்து விமானம் காணாமல் போனதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஜாவா கடல் பகுதியில் 32 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது அடர்த்தியான மேகங்கள் காரணமாக விமானத்தை 38 ஆயிரம் அடி உயரத்தில் அனுமதிக்கும்படி விமானி தரைக்கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்.
ஆனால், அந்த பகுதியில் எந்த நேரமும் தொடர்ந்து விமானங்கள் பறந்தவாறே இருக்கும் என்பதால் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அடுத்த 5 நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமானம் இழந்துள்ளது.
இந்த தகவலை இந்தோனேஷிய விமான நிலைய அதிகாரி ஒருவரும் உறுதி செய்தார்.
விமானம் பெலிதுங் தீவு பகுதியில் தென்கிழக்கு தன்ஜூங் பாண்டன் பகுதியில் 100 கடல் மைல் தொலைவில் இருந்த வரை அதன் நிலை தெரிந்து உள்ளது. அதன்பிறகுதான் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
விமானம் சென்ற பகுதியில் அடிக்கடி இடி, மின்னல் தாக்கும் பகுதி என்பதால் விமானத்தை இடி தாக்கி இருக்கலாம் என்றும் இதனால் அது நொறுங்கி கடலில் விழுந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
எனவே, நொறுங்கி விழுந்த விமானத்தின் உதிரி பாகங்கள் ஆழ்கடலுக்கு உள்ளாக சென்று இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆனால் விமானிகளும், வான்வெளி போக்குவரத்து துறை நிபுணர்களும் இடி மின்னல் என்பது விமான வழிப்பாதையில் சாதாரணமான ஒன்று. மேக அடுக்குகளின் சற்று மேலாக பறந்தாலே இதைத் தவிர்த்து விட முடியும். ரேடார் தொடர்பையும் பெற இயலும் என்கின்றனர்.
இதனிடையே மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தோனேஷியாவின் விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இந்த படைகளுடன் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஊழியர்களும் இணைந்துள்ளனர்.
இந்தோனேஷிய ராணுவத்தின் தேடுதல் மற்றும் மீட்பு படையினர் கிழக்கு பெலிதுங்கின் மாங்கர் பகுதி மீனவர்களிடம் மாயமாய் மறைந்த விமானம் பற்றி எடுத்துக் கூறி தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தின் உதிரிபாகங்கள் நடுக்கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதை இந்தோனேஷியா உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து இந்தோனேஷிய விமானப்படை செய்தி தொடர்பாளர் தஹ்னான்டோ கூறியதாவது:-
விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோனேஷிய ஹெலிகாப்டர் ஒன்று விமானத்தின் சிதறிய உதிரி பாகங்களையும், 2 இடங்களில் விமானத்தின் எண்ணை படலங்கள் மிதப்பதையும் ஜாவா தென் கிழக்கு கடலில் உள்ள பெலிதுங் தீவு பகுதியில் கண்டுபிடித்து இருக்கிறது.
இது விமானம் கடைசியாக தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெகு தொலைவில் இல்லை. அந்த பகுதியில் காணப்படும் எண்ணை படலங்கள் சேகரிக்கப்பட்டு அது மாயமான விமானத்தில் இருந்த பெட்ரோல்தானா? என்பது ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜகார்த்தா விமானப் படை தளத்தின் தளபதி டி புத்ரான்டோ கூறும்போது, ‘‘மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஓரியான் போர் விமானம் நங்கா தீவு அருகே சந்தேகத்துக்கு இடமான சில பொருட்களைக் கண்டதாக எங்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.
நங்கா தீவு, விமானம் மாயமான இடத்தில் இருந்து 1,120 கி.மீ. தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply