தமிழர்களை மீண்டும் புதைகுழிக்குள் தள்ளவே தமிழ் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு

நாட்டின் மிக மோசமான இனவாதிகளின் கூட்டாக உருவெடுத்துள்ள மைத்திரி தலைமையிலான எதிரணிக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கோருவது தமிழ் மக்களை மீண்டும் புதைகுழிக்கு தள்ளும் முடிவு என பாராளுமன்ற உறுப்பினரும். பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் 2015 தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் வாழ்கின்ற மக்களின் அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வட மாகாண சபைக்கு அரசாங்கம் ஒதுக்கிய நிதி மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படாமல் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்படவுள்ளது. மக்களுக்கு சேவையாற்றப் போவதாக கூறிக் கொண்டு பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று அரியாசனம் ஏறியவர்கள் மக்களின் எதிர்காலம் மேம்பாட்டுக்கு தடையாக உள்ளனர். இந்நிலையில் வடக்கு மாகாண சபை எமது கரங்களுக்கு வந்திருந்தால் மேலும் அதிகளவான நிதிகளை அரசாங்கத்திடம் இருந்த பெற்று மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களை அமுல்படுத்தியிருக்க முடியும்.

அத்தோடு இத் திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக சென்றடைந்து மக்கள் பயன்பெற்றும் இருப்பர். எமக்கு கிடைத்த இருநூறு மில்லியன் ரூபா நிதியிலிருந்து மூவாயிரம் பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ள துடன் பல பாலங்கள் குளங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, மாவட்ட செயலகம். பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஊடாக ஒதுக்கப்படுகின்ற நிதிகளில் ஒரு சதமேனும் திறைசேரிக்கு திரும்பச்செல்ல விடாமல் நேரடியாக அதற்குரிய தலைமைத்துவத்தைக் கொடுத்து, அதற்குரிய அதிகாரிகளை வழிநடத்தி, அந்த அதிகாரிகளின் உத்துழைப்புடன் மக்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதிப்படுத்தி வருகின்றோம் அதுவே மக்கள் பிரதிநிதிகளின் கடமை. அதனை நாம் சிறந்த முறையில் முன்னெடுத்திருக்கின்றோம்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் சென்று பழைய கதைகளைக் கூறி மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை உசுப்பேற்றிவிட்டு வாக்குகளை அபகரித்துச் சென்றுவிடுவார்கள். மீண்டும் அடுத்த தேர்தலில்தான் அவர்கள் மக்களை நாடிச் செல்வார்கள். கடந்த முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தில் மக்கள் தமது உறவுகளை இழந்து, பலர் அங்கவீனர்களாகவும். வறுமையிலும் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, மக்களின் வறுமையையும். அவலங்களையும் வைத்து அரசியலை முன்னெடுக்கும் கூட்டமைப்பினரின் செயற்பாடுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இனத்தின் பெயரால் அவர்கள் மூட்டிய தீ கொழுந்து விட்டெரிந்து எமது தேசத்தையே அழித்தது. அதில் அந்த தலைவர்கள் குளிர்காய்ந்தார்களே தவிர அதற்கு பலியாகிக் கொண்டிருந்த மக்களைப் பற்றி அவர்கள் துளியேனும் சிந்தித்ததில்லை. தாமும் தமது குடும்பங்களும் அதிலிருந்து தப்பி வாழ்வதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply