யாழ்.தேவி இன்று முதல் கே.கே.எஸ் வரை சேவை விசேட ரயிலில் ஜனாதிபதி பயணம்
24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் சேவை இன்று காங்கேசன்துறை வரை பயணம் செய்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட ரயிலில் காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்க இருப்பதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் சிசிர குமார தெரிவித்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவை 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து யாழ்தேவி ரயில் சேவை கடந்த 24 வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டதையடுத்து வடபகுதிக்கான ரயில் கட்டமைப்பை மீளமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்திய கடனுதவியுடன் இர்சொன் நிறுவனத்தி னால் ரயில் பாதைகள் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டன.
இதன்படி, வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையான ரயில் சேவை 2009 ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரையான சேவை 2011 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கிளிநொச்சி வரையான யாழ்தேவி சேவை 2013 செப்டெம்பரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி – பளை வரையான ரயில் சேவை கடந்த மார்ச் மாதத்தில் ஜனாதிபதி ஆரம்பித்தார். அடுத்த கட்டமான பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான சேவை 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கும் காங்கேசந் துறைக்குமிடையிலான 18 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை துரிதமாக நிர்மாணிக் கப்பட்டுள்ளதோடு இன்று சுபநேரத்தில் ரயில் சேவையை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கிறார்.
இதேவேளை மடு, தலை மன்னார் இடையிலான ரயில் பாதையும் மீளமைக்கப்பட்டுள்ளதோடு வடபகுதிக்கான சமிக்ஞை கட்டமைப்பும் மீள நிர்மாணிக்கப் பட்டுள்ளது. இதேவேளை யுத்தம் காரணமாக சேதமாக்கப்பட்ட ரயில் நிலையங்களும் பல்வேறு நிறுவனங்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற் குமிடையில் நாளாந்தம் 4 ரயில் சேவைகள் இடம்பெற்று வருவதோடு நாளை (03) முதல் இந்த ரயில் சேவைகள் காங்கேசன் துறை வரை நீடிக்கப்படும் என ரயில்வே வணிக அத்தியட்சகர் சிசிர குமார தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கும் காங்கேசன் துறைக்குமிடையிலான பரீட்சார்த்த சேவை கடந்த சில தினங்களுக்கு முன் வெற்றிகரமாக இடம்பெற்றது. இன்றைய நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உட்பட அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொள்வர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply