இலங்கையை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் : மைத்திரி
சர்வதேசத்தின் பெரும்பாலான நாடுகளின் நம்பிக்கையை தற்போது இலங்கை இழந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச சமூகத் தின் பிரேரணைகளுக்கு நாங்கள் இலக்காகியுள்ளோம். இந்நிலையில் இலங்கையை உலகிலிருந்து தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எனது அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக் கும் என்பதனை உறுதிப்படுத்துகின்றேன் என்று எதிரணியின்பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக இராணுவ வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் குறித்து நான் பயப்படுகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க, ரவி கருணாநாயக்க, ராஜித்த சேனாரட்ன, கருஜயசூரிய, எரான் விக்ரமரட்ன, ரிஷாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம், ஹர்ஷ டி.சில்வா, வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகள், ரோசி சேனாநாயக்க உள்ளிட்டோரும் கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகள்இ சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மைத்திரிபால சிறிசேன அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தீர்க்கமான தேர்தல்
இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களை விட இந்தத் தேர்தல் முக்கியமாக அமைந்துள்ளது. அரசாங்கத்தில் இருந்த மிக முக்கியமான கட்சிகள் எம்முடன் இணைந்துள்ளன. நாட்டில் காணப்படும் ஜனநாயகமற்ற தன்மை ஊழல் மற்றும் ஜனாதிபதி மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சி என்பனவற்றை முடிவுக்கு கொண்டுவரவே இவ்வாறு அரசாங்கத்தில் இருந்த கட்சிகள் எம்முடன் இணைந்துகொண்டுள்ளன.
நீதியான தேர்தலுக்கு அர்ப்பணிப்பு
பொது எதிரணியின் பொது வேட்பாளர் என்ற வகையில் நீதியானதும் நியாயமானதும் வன்முறையற்றதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நான் அர்ப்பணித்துள்ளேன். நீங்கள் வீதிகள் ஊடாக பயணிக்கும் போது எனது சுவரொட்டிகளை காண்பது அரிதாகவே இருக்கும்.வு தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என்று நான் எனது ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளேன். எனினும் ஆளும் கட்சி வேட்பாளரின் சிரித்த முகத்துடனான சுவரொட்டிகளை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
100 நாள் திட்டம்
டிசம்பர் மாதம் 19 ஆம் நாங்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டோம். இராஜதந்திர சமூகத்துக்கு இதன் பிரதிகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் 100 நாட்களில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையில் காணப்படுகின்ற அதிகாரங்களை குறைப்பதற்கு முதன்மை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பேன். அதற்கு பதிலாக பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்குகின்ற அரசியலமைப்பு கட்டமைப்பை உருவாக்குவேன்.
தேர்தல் முறை மாற்றப்படும்
தற்போதைய தேர்தல் முறை பாரிய துஷ்பிரயோகத்தக்கு உட்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். எனவே தேர்தல் முறையை மாற்றியமைத்து அனைத்து தொகுதிகளுக்கும் ஒரு உறுபபினர் இடம்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர்களுககும் உறுப்பினர்களுக்கும் இடையில் சிறந்த நெருங்கிய தொடர்பு இருக்கும் வகையில் இந்த முறையை உருவாக்குவோம்.
18 ஐ அகற்றுவேன்
ஜனநாயக சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான நிறுவனங்களை மீண்டும் உருவாக்குவேன். அந்தவகையில் 18 ஆவது திருத்தச் சட்டம் ரத்துச் செய்யப்படும். நீதிசேவை பொலிஸ் அரச சேவை தேர்தல்கள் கண்காய்வு சட்டமா அதிபர் திணைக்களம் ஆகிய துறைகளில் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய வங்கி மறுசீரமைக்கப்படும்
நாட்டின் மத்திய வங்கி மறுசீரமைக்கப்படும். அதாவது நாட்டின் பொருளாதாரத்தை சுயாதீனமாக மேற்பார்வை செய்யும் மத்திய வங்கியின் வகிபாகத்தை அங்கீரித்து இந்த மறுசீமைப்பு முன்னெடுக்கப்படும். அனைத்து செயற்பாடுகளிலும் பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் காணப்படும். நாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து ஆராய ஊழல்கள் குறித்து விசாரிககும் சுயாதீன ஆணைக்குழுவை நியமிப்பேன்.
சுதந்திர ஊடகம்
சுயாதீன மற்றும் சுதந்திர ஊடகவியலை உறுதிபடுத்தும் சூழலை உருவாக்குவேன். அரசா்ஙகத்தின் பிரசார கருவியாக அரச ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதை நிறுத்துவேன். மேலும் தகவல் அறியும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
வெளியுறவு சேவை மாறறியமைக்கப்படும்
வெளிநாட்டு சேவையை சிறந்த சேவயைாக மாற்றியமைப்பேன். வெளிநாட்டு சேவைக்கு அரசியல் நியமனங்களை செய்யமாட்டேன். தொழில்சார் தகைமையுள்ளவர்களைக்கொண்டு வெளிநாட்டு சேவையை மறுசீரமைப்பேன். தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை உருவாக்கிக்கொடுப்பேன்.
கைது செய்ய முயற்சி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்காக அரச வளங்கள் பாரியளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனது ஆதரவாளர்களை கைது செய்வதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனது கூட்டங்களுக்கு தாக்குதல் நடத்தப்படுகின்றன. சில இடங்களில் தீவைக்கப்படுகின்றன. மக்களை வாக்களிப்பதிலிருந்து தடுப்பதே இவர்களின் நோக்கமாகும்.
இராணுவ வீரர்கள் பயன்படுத்தப்படல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு மக்களை அழுத்தம் பிரயோகிப்பதற்காக இராணுவ வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது என்பது குறித்து நான் பயப்படுகின்றேன். நானும் எனது ஆதுரவாளர்களும் இந்த ஊழல் மிக்க தலைமைத்துவத்தை மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன் என்பதனை வலியுறுத்துகின்றேன்.
இலக்காகியுள்ளோம்
இலங்கை சர்வதேச சமூகத்தில் செயற்படு உறுப்பினராக ஒரு காலத்தில் இருந்தது. எனினும் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளின் நம்பிக்கையை இலங்கை இழந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச சமூத்தின் பிரேரணைகளுக்கு நாங்கள் இலக்காகியுள்ளோம்.
இந்நிலையில் இலங்கையை உலகிலிருந்து தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எனது அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதனை உறுதிபடுத்துகின்றேன். இலங்கையில் ஜனநாயகம் நல்லாட்சி அடிப்படை உரிமை சட்டத்தின் ஆட்சிபடுத்தல் ஊழலுக்கு முடிவு ஆகியவற்றை நிலைநாட்டினால் இலங்கை மீண்டும் சர்வதேச சமூகத்தின் மதிக்கத்தக்க பொறுப்புள்ள நாடாக மாறும்.
நாங்கள் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவோம். அனைத்து பிரஜைகளும் சமத்துவமான சந்தர்ப்பங்களை பெறும் வகையிலும் சகவாழ்வுடன் வாழும் வகையிலுமான சமூகத்தை உருவாக்குவோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply