ஆளுக்கொரு நீதியை வலியுறுத்தும் சம்மந்தன் குழுவினருக்கு எதிராக தமிழர்கள் சாட்டையை சுழற்ற வேண்டும். ப.உதயராசா
சனாதிபதி தேர்தலில் சொந்த சலுகைகளுக்காக சோரம் போன சம்மந்தன் குழுவினருக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்கு உரிமையை பயன்படுத்தி நல்ல சாட்டை அடியினை கொடுக்க முன்வரவேண்டும் என சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்தார். செட்டிகுளத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரணி வேட்பாளர்களை ஆதரிக்கும் பரிவாரத்தில் தேரை செலுத்துபவர்கள் அனைவரும் முன்னர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து சொத்து சேர்த்தவர்களும் தவறான வழியில் வாணிபம் செய்தவர்களுமே அதிகம்.ஆகவே தமிழ் மக்களாகிய நீங்கள் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பினை நிராகரிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபுறம் வன்னி மண்ணை தன் சொந்தப்பெயரிலும் பினாமிகள் பெயரிலும் கபளீகரம் செய்துள்ள றிசாட் பதியுதீன் மறுபுறம், தீவிர சிங்கள தேசியத்தினை கோருகின்றதும் மாகாணஅதிகாரங்களை குறைப்பு செய்ய கோரிக்கை விடுக்கின்றதுமான சிங்கள தேசிய கட்சிகள் இன்னொருபுறம் என்ற நிலையிலே பொதுவேட்பாளர் என்ற போர்வையை போர்த்தியே உங்கள் முன் வாக்கிற்கு வருகின்றனர். ஆனால் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் அவர்கள் தங்கள் போர்வையை கழற்றி தமிழினத்தை நசுக்குவதையே முதல்கட்டமாக மேற்கொள்வர். இதை நீங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள்.
ஒரு றாத்தல் பாணின் விலையை மூன்று ருபாவாக அறிமுகப்படுத்தியே ஆட்சிக்கு வந்தவர் சந்திரிக்கா அம்மையார் ஆனால் தமிழ் மக்களுக்கு இருந்த எல்லா நன்மைகளையும் அதிகாரங்களையும் இழக்கச்செய்தார். பரிகாரங்களையோ பிராயச்சித்தங்களையோ கூட இதுவரை தமிழ் மக்களுக்கு வழங்கியதில்லை. ஆனால் அவர் தலைமையியே தான் இன்று பொது வேட்பாளர் சனாதிபதி கதிரையை அலங்கரிக்க முனைகிறார்.
நாம் தமிழ் தேசியத்திற்கு எப்போதும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அபிவிருத்தியில் அதீத அக்கறை கொண்டவர்கள். அதனால் தான் கடந்த காலங்களில் அபிவிருத்தி அரசியலையே முன்னிலைபடுத்தி வந்திருக்கின்றோம். அதன் விளைவாக பெருமளவான பிரதேசங்களின் மின்சாரவசதி உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களை தமிழ் மக்களிற்கு சாதகமாக கையாண்டு இருக்கின்றோம். ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நிலா காட்டி சோறு ஊட்டும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. பொதுவேட்பாளர் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு அனைவரும் எதிர்பார்க்கும் தீர்வுத்திட்டத்தினை பொதுவேட்பாளர் தருவார் என்று பொய்பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை சுதந்திரமடைந்த பிற்பாடு தமிழர்களுடைய இனப்பிரச்சினை என்பது வேறு. அதற்கு முற்பட்ட காலங்களின் நிலமை என்பது வேறு. சனாதிபதி முறைமை உருவாக்கப்பட்ட பின்னர் இதுவரையும் ஐந்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் நாட்டினை ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்த ஆட்சி முறைக்கு எதிராக பல்வேறு போராட்ட அமைப்புக்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. இன்னும் சில மாற்று வடிவம் பெற்று சனநாயகவழியில் போராடிக்கொண்டு இருக்கின்றன. ஆகவே தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை என்பது இன்று நேற்று ஆரம்பித்ததும் அல்ல சனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர் அஸ்தமிக்க போவதும் அல்ல. நிலமை இவ்வாறிருக்க சம்மந்தன் குழுவினர் பொதுவேட்பாளர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பொதுடே;பாளர் சனாதிபதியானதும் பேச்சுக்களின் மூலம் தருவார் என்பது அப்பட்டமான பொய் அல்லவா.
அற்ப சொற்ப ஆசைகளிற்காக தமிழ் மக்களை அடைவ வைக்க முனைவது தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்களிற்கு செய்யும் துரோகமல்லவா? இது வரை எத்தனை பேச்சு வார்த்தை மேசைகளை எமது தமிழினம் கண்டிருக்கும். அத்தனையும் தராத தீர்வை மரத்தில் இருந்து பறித்து தருவது போல தமிழ் மக்களை ஏமாற்றுவது தான் உண்மையான தமிழ் தேசியமா? என்ற கேள்வி அப்பாவி பொதுமகன் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கின்றது.
அது மாத்திரமல்ல எவ்வித தேர்தலும் பொதுச்சபை வாக்கெடுப்பும் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆயட்கால தலைவராக இருக்கின்ற சம்மந்தனும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியத்தலைவராக தொடர்ந்து இருக்க துடிக்கும் ரனில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் இன்றி கட்சியின் ஆயட்கால தலைவராக இருக்கின்ற போது மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்த சனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏன் நாட்டின் தலைவராக மக்களுடைய ஆணையுடன் தொடர்ந்து நல்லாட்சியை வழங்கக்கூடாது. இதிலிருந்தே தெரிகிறது சம்மந்தனும் பொதுவேட்பாளரின் பரிகாரங்களும் ஆளுக்கொரு நீதியைதான் வைத்துள்ளனர். ஆகவே இவர்கள் கையில் நாட்டின் ஆட்சி கிடைத்தால் நிலமை என்னவாகும் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply