முன்னால் போராளிகளை சிறைக்கு அனுப்ப வடக்கு முதலமைச்சர் முனைகிறார். ப. உதயராசா கவலை

பதவிக்களுக்காக யாருடனும் கூடிப்பேசவும் யாருக்காகவும் வாக்குக் கேட்கவும் தயாராக இருக்கின்ற குள்ளநரிகளின் கூடார தலைவராக செயற்படும் சம்மந்தனும் வடமாகாண முதலமைச்சரும் முன்னால் போராளிகளை சிறைக்கு அனுப்புவதற்கான வஞ்சக செயலில் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது என சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் அண்மைக்காலமாக தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டங்கள் மீதான வெறுப்பினை மேடைகளில் வெளிப்படுத்தி வந்ததை தமிழ் மக்கள் அறிவார்கள். அதன் அடுத்த கட்டமாக முன்னால் போராளிகள் மீதுள்ள காழ்ப்புணர்வை வெளிகாட்டவும் அவர்களை பழிவாங்கவும் தற்போது பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக தங்களது சனாதிபதி தேர்தல் முடிவினை அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் முன்னால் போராளிகளை மீண்டும் சிறைக்கு அனுப்பிவிட்டு பொதுவேட்பாளருடன் இணக்க அரசியலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது எமக்கு கவலை அளிக்கிறது.
ஏன்எனில் பொதுவேட்பாளரின் ஆதராவாளரும் சிங்கள இனவாத கட்சியை சேர்ந்தவருமான சம்பிக்க ரணவக்க மிகத்தெளிவாக தென்னிலங்கையில் மேடைகளிலும் ஊடகங்களிலும் தானும் தனது கட்சியும் பொதுவேட்பாளரை ஆதரிப்பதன் நோக்கம் வடமாகாணசபையின் அதிகாரங்களை குறைப்பதும் வடக்கில் இராணுவ பிரசன்னத்தை அதிகரிப்பதும் சுதந்திரமாக வெளியில் நடமாடும் முன்னால் போராளிகளை சிறைக்கு அனுப்புவதற்குமாகும் என்ற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆகவே பொதுவேட்பாளரை ஆதரிக்கின்ற கூட்டுக்குள் ஒரு தெளிவான தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடையாது என்பதுடன் தமிழ் இளைஞர்களை பழிவாங்குவதற்கான வஞ்சக செயலே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலை மிகமோசமானது என்பதுடன் நல்லாட்சிக்கு பங்கம் விளைவிப்பதுமான செயலாகும்.
எமது கட்சியை பொறுத்தவரையில் எம்மால் முடிந்தளவுக்கு சனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பேசி முன்னால் போராளிகள் சிறையிலிருந்து மறுவாழ்வு பெற அரசியல் ரீதியாக செயற்பட்டு வந்திருக்கின்றோம். இன்னும் சிறைகளில் வாழும் இளைஞர் யுவதிகளை விடுதலை அடைவதற்கான கோரிக்கைகளை முன்வைத்து செயற்பட்டும் வருகின்றோம்.இந்நிலையில் அரசியல் முதிர்ச்சியுடைய தலைவர் என தன்னை இனங்காட்டி வந்த சம்மந்தன் எப்போதும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் பின்கதவு விருந்தாளியாகவே இருந்து வந்திருக்கிறார்.
தமிழ் மக்களுக்கு தன்னை தமிழ் தேசியவாதியாகவும் தேசிய அரசாங்கங்களிற்கு தன்னை விசுவாசியாகவும் வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. இந்த உண்மையை தமிழ் மக்கள் உணர்வதற்கு காலதாமதம் ஆனதால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒவ்வொரு தேர்தல்களையும் இறுதித்தேர்தலாகவும் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான பிரசவ வலியாகவும் பேசி சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தமிழ் மக்களின் உணர்ச்சி  அலையிலே வாக்கு வங்கியை நிரப்பி கொண்டனர்.
தமிழ் மக்களும் தங்களின் உரிமைக்கான குரலாகவும் போராட்ட புருசர்களாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளை கருதியதால் தேர்தலில் வென்றாலும் தங்கள் தேவைகளை அவர்களிடம் முன்வைப்பதில்லை. இதனை சாதகமாக்கிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தேர்தலில் வென்றவுடன் வெளிநாடுகளிற்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்வதும் தங்கள் வியாபாரங்களை மேம்படுத்துவதற்காக அரசியல் பதவிகளை பயன்படுத்துவதையுமே நோக்காக கொண்டிருந்தனர்.
இன்னும் சிலர் புலம் பெயர் அமைப்புக்களிடம் இருந்து பணம் பெற்று மக்கள் சேவை செய்வதாக காட்டி தங்கள் சட்டை பைகளை நிரப்பிக்கொண்டனர். ஆனால் இன்று நிலமை மாறியிருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் தலமைகளின் வங்குரோத்து அரசியல் முடிவுகள் தொடர்பாக பகிரங்கமாக கேள்வி கேட்டும் விமர்சிக்கவும் தொடங்கிவிட்டனர்.
பசுத்தோல் போர்த்திய நரிகள் தமிழ் மக்களின் தலைவர்களாக இருப்பதை மக்கள் இனம் கண்டுகொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது தமிழ் மக்களுடைய அரசியலில் மக்கள் புரட்சியை வெளிப்படுத்துகிறது. தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களை முட்டாள்களாக எண்ணுகின்ற நிலமை மாறவேண்டும். இது மக்களின் சனநாயக புரட்சியின் மூலமே சாத்தியமாகும் என்பதே எமது அளப்பரிய நம்பிக்கை ஆகும்.
முன்னால் நீதிபதியும் தற்போதைய வடமாகாணமுதலமைச்சரின் பொதுவேட்பாளர் ஆதரவு அறிக்கை மிகவும் வேடிக்கையானது. நம் இளைஞர்களை சிறைக்கு அனுப்ப துடிப்பவனிடம் கைவிலங்கினை கையில் கொடுத்து விடு என்கிறார்.
அது மாத்திரமன்றி சம்மந்தன் எடுத்த முடிவிற்கு ஆதரவு என்கிறார். இது கொழும்பிலே தமிழ் மக்களின் வாழ்வும் வறுமையும் தெரியாது சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சி.விக்கினேஸ்வரனை வடக்கின் முதலமைச்சராக்கியதற்கு நன்றிக்கடனாக அவர் தனது தனிப்பட்ட விருப்பை தெரிவிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழ் மக்களை தவறான வழியில் பழிவாங்க முனைவது மிக மோசமான விளைவுகளை தரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதுமாத்திரமன்றி அபிவிருத்திகளை செய்து காட்டிய வேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ திகழ்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆகவே தமிழ் மக்கள் சனாதிபதி தேர்தலினை அமைதிக்காகவும் அபிவிருத்திக்காகவும் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கி சனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம்  ஆசியாவின் ஆச்சரியத்தினை நோக்கியதாக நாட்டையும்  அபிவிருத்தியின் ஆச்சரியமாக வடக்கு கிழக்கும் திகழ உங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply