யாழில் தேர்தல் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தொடங்கவிருக்கும் நிலையில், யாழ் மாவட்டத்தில் வன்முறையற்ற வகையில் நேர்மையாகத் தேர்தல் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்தத் தேர்தலுக்கென 526 வாக்குச்சாவடிகள், வாக்குகளை எண்ணுவதற்கு 44 வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் சுமார் ஐயாயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 2000க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து பேசிய சுந்தரம் அருமைநாயகம், அனைத்துக் கட்சியினருடனும் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும், வன்முறையற்ற வகையில் நேர்மையாக நடக்கும் என்று தெரிவித்தார்,
இதற்கிடையில், தெற்காசியாவிலிருந்து வந்த தேர்தல் பார்வையாளர் குழுவான செம்போஸா வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளைப் பார்வையிட்டுள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருப்பதாகவும் நிலைமை சாதாரணமாக இருப்பதால் வன்முறையற்ற முறையில் தேர்தல் நடைபெறும் என நம்புவதாகவும் இந்தக் குழுவில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த லக்ஷ்மணன் தெரிவித்தார்.
இருந்தபோதும், தேர்தலின்போது வன்முறைகள் நிகழலாம் என சில வேட்பாளர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் லக்ஷ்மணன் தெரிவித்தார்.
தேர்தல் முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் யாழ் மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். 4.30 அளவில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 6 மணியளவிலிருந்து பிற வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அமைக்கப்பட்டிருக்கும் 44 வாக்கு எண்ணும் மையங்களில் 8 மையங்களில் தபால் வாக்குகள் மட்டும் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply