புல்மோட்டை இந்திய களவைத்தியசாலை குறித்த ஜே.வி.பி.யின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது : ஊடகத்துறை அமைச்சர் யாப்பா
வடக்கில் யுத்தத்தினால் காயமடையும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென்று புல்மோட்டையில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் வைத்தியசாலையானது உண்மையிலேயே இந்திய இராணுவத்தின் முகாமாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டுவதில் எவ்வித உண்மையும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்து கூறுகையில், ஏதாவதொரு நல்ல திட்டம் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிப்பதை மக்கள் விடுதலை முன்னணி ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது. வீணான ஓர் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு முதற்கட்ட தீர்மானங்களை எடுத்து எதிர்ப்பையே தெரிவிக்கின்றது. பின்னர் உன்மையை உணர்ந்து அதனை ஏற்றுக்கொள்கின்றது.
இந்திய இராணுவம் இங்கு வரும்போதும் பல பிச்சினை ஏற்படும் என்றும் இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்ப உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுத்தது.
அதேபோன்று எண்ணெய்த் தாங்கிகள் விடயத்திலும் பல கருத்துக்களைத் தெரிவித்தது. இதற்கு மாகாண சபை மற்றுமொரு நல்ல உதாரணமாகும். மாகாணசபை அறிமுகப்படுத்தப்பட்ட போது இதனால் நாடு பிளவு படும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூக்குரலிட்டது. பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களும் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களாகவும் பதவி வகிக்கின்றனர்.
இல்லாத ஒரு அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு ஆரம்பக் கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையோ திட்டத்தையோ அரசாங்கம் அனுமதிப்பதில்லை. நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் தோன்றிய சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரையும் அரசாங்கம் நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. எனவே அரசாங்கத்தின் திட்டம் குறித்து வீணான அச்சத்தை ஏறபடுத்திக்கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply