பிரெஞ்சு சஞ்சிகை அலுவலகம் மீது தாக்குதலில் குறைந்தது 12 பேர் பலி

பிரான்சின் நகைச்சுவை மற்றும் பகடி இதழான “சார்லி ஹெப்டோ”வின் அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்திருக்கின்றனர். பாரிசிலிருந்து வெளிவரும் இந்த சஞ்சிகை கடந்த காலங்களில் இஸ்லாமியவாதிகளால் இலக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல் உள்ளூர் நேரப்படி காலை நடந்தது. முகமூடி அணிந்த ஆயுததாரிகள் அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்து தானியங்கி ஆயுதங்களை வைத்து சுடத்தொடங்கினர்.குறைந்தது 50 குண்டுகள் சுட்டுத்தீர்க்கப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன.

தாக்குதலை நடத்தியவர்கள் பின்னர் ஒரு காரில் தப்பியோடிவிட்டனர்

கொல்லப்பட்டவர்களில் இருவர் போலிஸ் அதிகாரிகள் என்று போலிசார் கூறினர்.

தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரிகள் ” இறைதூதரை நிந்தித்தற்கு பழி தீர்த்துவிட்டோம்” என்று கூக்குரல் எழுப்பியதாகப் போலிசார் கூறினர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒலோந்து இந்த சஞ்சிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலை மிகக் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என்று வர்ணித்தார். பிரெஞ்சுக் குடியரசால் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட்ட ஊடகவியலாளர்களை பயங்கரவாதிகள் கோழைத்தனமாக கொன்றிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் சமீப வாரங்களில் தடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் ஒல்லோந்து கூறினார்.

தாக்குதலை நடத்தியவர்களைப் பிடிக்க பெரும் போலிஸ் நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

பிரெஞ்சுத் தலைநகர் முழுவதும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

அதிபர் பிரான்சுவா ஒலோந்து இந்த தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார். இதன் பின்னர் அவர் அரசின் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்துவார்.
சர்ச்சையும் சார்லி ஹெப்டோவும்

தாக்குதலுக்குள்ளான பிரஞ்சு சஞ்சிகையான, சார்லி ஹெப்டொ ஒரு வார இதழ். இது டென்மார்க் பத்திரிகையொன்றில் முதலில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய இறைதூதர் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை 2006ம் ஆண்டில் மறு பிரசுரம் செய்து சர்ச்சைக்குள்ளானது.

கடந்த 2011ம் ஆண்டில், ஷாரியா ஹெப்டோ என்ற தலைப்பின் கீழ், இறைதூதர் முகமது நபியின் கேலி சித்திரம் ஒன்றை பிரசுரித்த பின்னர், இந்த சஞ்சிகையின் அலுவலகங்கள் தீக்குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாயின.

அடுத்த ஆண்டில், பல நாடுகளில் ” இன்னசன்ஸ் ஒப் முஸ்லீம்ஸ்” என்ற படம் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த சூழலில், இந்த சஞ்சிகை முகமது நபியை நிர்வாணமாகக் காட்டும் படங்களை பிரசுரித்தது.

பிரான்சின் இனவெறிக்கெதிரான சட்டங்களின் கீழ் இதற்கெதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையிலும், சார்லி ஹெப்டோ சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள் பலவற்றை தொடர்ந்தும் பிரசுரித்து வந்தது .

அதன் ஆசிரியர் போலிஸ் பாதுகாப்பில் வசிக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply