சிறிசேனாவிடம் தமிழர்கள் எதிர்பார்க்கும் 4 விஷயங்கள்

தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தப்படி இலங்கை தேர்தல் முடிவுகள் வந்து விட்டது. தமிழ் இனத்தை பெரும் அளவில் அழித்த மகிந்த ராஜபக்சே விரட்டியடிக்கப்பட்டு விட்டார்.இலங்கையின் புதிய அதிபராக மைத்ரீபால சிறிசேனா ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது, நிறைய வாக்குறுதிகளை சிறிசேனா வெளியிட்டிருந்தார். இதனால் சிறிசேனா அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. சிங்களர்கள், ஊழல் இல்லாத ஆட்சி வருமா என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழர்கள், தங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள்.இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான் நாடுகளும் தங்கள் வெளியுறவுக் கொள்கையை இலங்கையை தங்கள் பிடிக்குள் கொண்டு வரும் வகையில் மாற்ற தீவிரமாகியுள்ளன.

இவற்றில் வடகிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்புதான் மிக, மிக அதிகமாக உள்ளது. சிறிசேனாவிடம் அவர்கள் 4 முக்கிய மாற்றங்களை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். அந்த 4 அம்சங்கள் வருமாறு….

1. சம உரிமை

2. நிலத்தை திருப்பி பெறுவது

3. ராணுவம் வாபஸ்

4. இந்தியாவுடன் சுமூக உறவு

இந்த நான்கு அம்சங்களையும் சற்று விரிவாகப் பார்த்தால், தமிழர்களின் எதிர் பார்ப்புக்கு பின்னுள்ள ஏக்கம் புரியும்.

1. சம உரிமை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை ஆண்டது தமிழர்கள்தான். இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்து அங்கு சென்று குடியேறிய சிங்கள புத்த மதத்தினர், நாளடைவில் தமிழர்களை எல்லா துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி விட்டனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் போய் விட்டது.

அந்த உரிமைகளைப் பெற அமைதி வழியில் போராடிய அமிர்தலிங்கம் போன்றவர்களும், ஆயுதம் ஏந்தி போராடிய பிரபாகரன் போன்றவர்களும் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இலங்கை வடகிழக்கில் உள்ள தமிழர்கள் இன்னமும் சில உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள்.

தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதற்காக 1987–ம் ஆண்டு இந்தியா, கடும் அழுத்தம் கொடுத்து ஒரு ஒப்பந்தத்தை கொண்டு வந்தது. அதன்படி இலங்கை அரசியல் சட்டத்தில் 13–வது சட்டப்பிரிவு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டது.

இந்த புதிய சட்டம், தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ வழிவகை செய்கிறது. அதாவது தமிழர்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்ய இந்த சட்டம் உதவுகிறது. இதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக மாற்ற வேண்டும் என்றும் 13–வது சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர சிங்களர்களுக்கு சமமான எல்லா உரிமைகள், மதிப்பு, மரியாதைகளை பெறவும் அந்த சட்டத்தில் பல பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஈழத்தில் தமிழ் இனம் எதற்காகவும், யாருக்காவும் கை ஏந்த வேண்டிய அவசியமே இருக்காது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிங்களர்கள், ஜனதா விருக்தி பெரமுனா கட்சி சார்பில் கடந்த 2007–ம் ஆண்டு இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து 13–வது சட்டத்தை முடக்கி விட்டனர். ரத்து செய்யப்பட்ட அந்த சட்டம் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்வும், உரிமையும் பாதுகாக்கப்பட 13–வது சட்டம் அவசியம் வேண்டும் என்கிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், 13–வது சட்டப் பிரிவினால் மட்டுமே ஈழ தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை கொடுக்க முடியும் என்று வற்புறுத்தி வருகிறது.

இதில் சிறிசேனா என்ன முடிவு எடுப்பார் என்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

2. நிலத்தை திரும்ப பெறுவது

அடுத்து தமிழர்கள் முன் உள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு – தங்கள் பூர்வீக நிலம் தங்களுக்குத் திரும்ப கிடைக்குமா என்பது.

1833–ம் ஆண்டுக்கு முன்பு இலங்கை மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் இருந்த தமிழர்களுக்கு 35 சதவீத நிலப்பரப்பு சொந்தமாக இருந்தது. 1889–ல் அது 29 சதவீதமாக குறைந்தது.

1960–க்கு பிறகு 2000–ம் ஆண்டு வரை தமிழர்களுக்கு எதிராக நடந்த போர், கலவரம் ஒவ்வொன்றின் போதும் தமிழர்களின் நிலங்கள் சிங்களர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

இதனால் 2000–ம் ஆண்டில் தமிழர்களுக்கு வெறும் 15 சதவீத நிலமே மிஞ்சியது. அதாவது 1833–ம் ஆண்டுக்கு பிறகு 2000–ம் ஆண்டு வரை 167 ஆண்டுகளில் தமிழர்கள் சுமார் 70 சதவீத நிலத்தை பறிகொடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த 2009–ம் ஆண்டு இறுதி கட்ட போர் நடந்தபோது சுமார் 1 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தமிழர்களின் நிலம் இலங்கை ராணுவம் மற்றும் சிங்களர்கள் கைக்கு போய் விட்டது. தமிழர்களின் பாரம்பரியம் மிக்க செழிப்பான வயல்களில் இன்று விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த நிலத்துக்கு சொந்தகாரரான தமிழன் முள்வேலிக்குள் சொந்த பூமியிலேயே அகதியாக உள்ளான்.

இந்த பரிதாப நிலை மாற வேண்டுமானால் ராஜபக்சே அடாவடியும், அக்கிரமும் செய்து பிடித்துக் கொண்ட சுமார் 1 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தமிழர்களின் நிலம் மீட்கப்பட வேண்டும். அதோடு முகாம்களில் உள்ள தமிழர்கள் அவர்களது சொந்த ஊரில் குடியமர்த்தப்பட வேண்டும்.

இது நடக்குமா? சிறிசேனா இதற்கு உதவுவாரா? என்று தமிழர்கள் ஏக்கத்தோடு உள்ளனர். முகாம்களில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படலாம். ஆனால் அவர்களது பூர்வீக பூமி திரும்ப கிடைக்குமா? எல்லாம் சிறிசேனா எடுக்கப்போகும் முடிவில்தான் உள்ளது.

3. ராணுவம் வாபஸ் பெறப்படுமா?

மூன்றாவதாக இலங்கை தமிழர்கள், தங்கள் ஊர்களில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இலங்கையின் மொத்த ராணுவ வீரர்களில் 80 சதவீத பேர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது 4 தமிழனுக்கு ஒரு சிங்கள வீரன் காவல் இருப்பது போல இருக்கிறான். இதனால் தமிழர்கள் தினம் தினம் நரக வேதனையை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் எங்கும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் உள்ளனர்.

தமிழ்ப் பெண்கள் அச்சமின்றி வெளியில் வர முடிவதில்லை. கோவில் திருவிழாக்களை பாரம்பரிய வழக்கப்படி நடத்த முடியவில்லை.

தமிழர்கள் எது செய்வதாக இருந்தாலும் ராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும். அது மட்டுமின்றி எது செய்தாலும் ராணுவ வீரர்கள் கண் எதிரில்தான் செய்ய வேண்டும். இந்த அவலம் மாற வேண்டுமானால், ராணுவத்தை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள்.

ஆனால் சிறிசேனா இதற்கு சம்மதிக்க மாட்டார் என்று ஏற்கனவே தெளிவாகி விட்டது. விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்களில் இருந்து 5 தடவை உயிர் தப்பிய அவர், வடக்கில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று தேர்தல் பிரசாரத்தின் போதே கூறினார்.

என்றாலும் ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு சிறிசேனா செவி சாய்ப்பாரா என்று தெரிய வில்லை.

4. இந்தியாவுடன் நட்புறவு

இலங்கையில் உள்ள தமிழர்களும், இந்தியாவில் உள்ள தமிழர்களும் சிறி சேனா வருகையால் இந்தியா – இலங்கை உறவு மேம்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ராஜபக்சே இருந்தவரை அவர் பல வகைகளில் இந்தியாவுக்கு எதிராக இருந்தார்.

தமிழர்கள் மறுமலர்ச்சி பெற இந்தியா புதிய ரெயில் பாதை, 50 ஆயிரம் வீடுகள், விவசாய கருவிகள் கொடுக்க முன் வந்தது. அவற்றையெல்லாம் ராஜபக்சே கண்டு கொள்ளவில்லை. வீடு இழந்த தமிழர்களுக்கு இந்தியா வீடு கட்டிக் கொடுப்பதை அவர் விரும்பவில்லை.

எனவேதான் இந்தியாவை சீண்ட, சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் நிற்க அனுமதித்தார். இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒருவித அச்சுறுத்தலை ராஜபக்சே ஏற்படுத்தினார்.

இந்தியாவின் உதவிகளை மறுத்து சீனா, பாகிஸ்தானிடம் உதவிகள் பெற்றார். சிறிசேனா அப்படி இருக்க மாட்டார் என்கிறார்கள். இதை கருத்தில் கொண்டே பிரதமர் மோடி முதல் ஆளாக சிறி சேனாவுக்கு வாழ்த்து கூறியதாக சொல்கிறார்கள்.

ராஜபக்சே ஆட்சியில் இருந்தவரை பிரதமர் மோடி இலங்கை செல்ல யோசித்துக் கொண்டிருந்தார். இனி மோடி சென்றால், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே பிரதமர் மோடி விரைவில் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளார். இது புதிய அத்தியாயத்துக்கு வழி ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply