கொடிய யுத்தத்தை இல்லாதொழித்த மஹிந்தவுக்கு எமது கெளரவம் என்றும் இருக்கும் : பிரதமர் ரணில்
கொடிய யுத்தத்தை இல்லாதொழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமது கெளரவம் என்றும் இருக்கும்” என்று புதிய பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின்னரான காலங்களில் மக்கள் அமைதியாக செயற்பட வேண்டும் என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.6 ஆவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை ஜனாதிபதியாக்கிய அனைவருக்கும் எமது நன்றிகள். மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் நிச்சயமாக ஏற்படும்.
மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்தேன். அப்போது அவர், மக்களின் முடிவை ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
30 வருடகாலமாக நாட்டை சீரழித்த யுத்தத்தை இல்லாதொழித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு என்றுமே எமது கெளரவம் இருக்கும்.
எனினும், மக்கள் தற்போது மாற்றம் ஒன்றையே எதிர்ப்பார்க்கின்றனர். புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கிணங்க, நாம் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வோம்.
அதேநேரம், எந்தவொரு பிரஜையும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்றும் நாம் கேட்டுக் கொள்கிறோம். வெற்றி தோல்வியை அமைதியான முறையிலேயே எதிர்கொள்ளவேண்டும். இதனை மீறுவோருக்கு எதிராக பொலிஸார் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply