கூட்டமைப்பின் தலைவர்கள் காழ்ப்புணர்ச்சிகளை துறந்து மக்களுக்கு பணியாற்ற முன்வர வேண்டும்! உதயராசா கோரிக்கை
நடந்து முடிந்த சனாதிபதி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய சனாதிபதி என்ற வகையில் எமது இதயம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். என சிறி ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சனாதிபதி தேர்தல் முடிவுற்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில தலைவர்களால் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகள் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு சவால் விடுவனவாக அமைவது கவலை அளிக்கிறது என்பதுடன் பழிவாங்கும் எண்ணத்தையும் வெளிக்காட்டி நிற்கிறது.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் புதிய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவி ஏற்பு வைபத்திலே முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை கௌரவத்துடன் நினைவுபடுத்தினார்.
அது மாத்திரமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் வன்முறையை யாரும் கையில் எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். அதற்கு மாறாகவும் பழிவாங்கும் எண்ணத்துடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில தலைவர்கள் செயற்பட்டு வருவது தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு உகந்தது அல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புவதுடன் காழ்ப்புணர்வுகளை மறந்து தமிழ் தலைமைகள் ஒன்று பட்டு செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு சிறப்பான பணியை ஆற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
பெரும்பாலான தமிழ் மக்கள் வழங்கிய சனாநாயக தீர்ப்பிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம் என்பதுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விடயத்தில் நல்லதொரு தீர்வு எட்டப்படுவதற்கு இறைவனை பிரார்த்தித்தும் கொள்கின்றோம்.
இம்முறை தேர்தலை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய வாக்குறுதி ஒன்றினை கொடுத்தே மக்களை திசைதிருப்பி இருந்தனர்.
அந்த வகையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விடயத்தில் வழமைபோல சிங்கள ஏகாதிபத்தியத்திடம் தோற்றுவிட்டோம் என்ற பேச்சினை மீளவும் ஆரம்பிக்க மாட்டார்கள்.
என்று நம்புகின்றோம். அவ்வாறு இல்லாமல் மீளவும் பழைய பல்லவியை பாட ஆரம்பிப்பார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றுக்கும் செய்த பாரிய துரோகம் ஒன்றாகவே கருதப்படும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
சுதந்திரத்தினை தொலைத்து விட்டு அடிமை வாழ்வினை வாழ்வதற்கு உலகில் பிறந்த எந்த உயிரினமும் விரும்புவதில்லை. அவ்வாறானதொரு நிலையினை தான் தமிழ் மக்கள் விரும்பியுள்ளனர்.
ஆகவே தமிழ் மக்களின் இந்த விருப்பம் தொடர்பாக நாம் கருத்து எதனையும் சொல்ல விரும்பவில்லை. அது எம் மக்களின் சனநாயக உரிமை.
ஆயினும் யுத்தம் முடிவடைந்து மிக குறுகிய காலத்தில் பாரியளவு அபிவிருத்தியை மேற்கொண்ட தலைவர் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. அந்த விடயத்தில் அவருக்கு என்று தனி கௌரவம் உண்டு. அந்த வகையில் அபிவிருத்தியை எதிர்பார்த்து தங்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற எமது கட்சியின் வேண்டுகோளை ஏற்று பல் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து உள்ளனர்.
அவர்களின் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் நானும் எமது கட்சியும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அது மாத்திரமன்றி தமிழர்கள் தங்கள் சொந்த பிரதேசங்களில் அடையாள அட்டைகளுடன் நடமாட வேண்டிய சூழ்நிலையே காணப்படுகிறது. இந்நிலை மாற்றி அமைக்கப்படுவதுடன் சிறையில் வாடுகின்ற முன்னாள் போராளிகளுக்கு விடுதலை அளிக்கவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள சனாதிபதி முன்வரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply