மஹிந்த ஆட்சிக்காலத்தின் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் : சம்பிக்க ரணவக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் மக்களை தெளிவூட்ட உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரண வக்க, ஊழல் செயற்பாட்டினை மேற்கொண்டவர்கள் எந்த ஒரு தரப்பினராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமயவினால் நியமிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு முன்னணி அமைப்பினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி காலத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் அரசில் அங்கத்துவம் பெற்றிருந்த அமைச்சர்கள் உட்பட அரச அதிகாரிகள் பல்வேறு ஊழல் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முன்னைய அரசாங்கத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட உச்சக்கட்ட ஊழல் செயற்பாடுகள் காரணமாகவே இன்று எமது நாடு பொருளாதார வீழ்ச்சியின் கீழ் பாரிய கடன் சுமைக்கு ஆளாகி இருப்பதோடு மக்கள் அதிகளவான வாழ்க்கை சுமையை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலையில் எமது புதிய அரசில் இவற்றுக்கான உரிய தீர்வை முன்வைக்க உத்தேசித்துள்ளதோடு ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய தகவல்களை திரட்டி இதனுடன் தொடர்புடையவர்கள் எந்த தரப்பினராக இருப்பினும் எந்த ஒரு பதவியில் இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
எனவே, முன்னைய அரசின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் எமக்கு இதுவரையான காலப்பகுதியில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இது தொடர்பில் மேலும் தகவல்களை திரட்டும் முகமாக நாம் ஊழல் எதிர்ப்பு முன்னணி என்ற ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளோம்.
அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் அறிந்த அனைத்து தரப்பினரும் எமது தொலைபேசி இலக்கமான 011-2884583 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு எமக்கு அறியதருவதோடு எமது மின் அஞ்சல் முகவரியான anticorruptionfront2@gmail.com (link sends e-mail) என்ற முகவரிக்கு உங்களுக்கு கிடைக்க பெற்ற தகவல்களை பதிவு செய்ய முடியும். இவ்வாறு தகவல்கள் தருபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
முன்னாள் ஜனாதிபதியின் பிரசார நடவடிக்கைகள்
முன்னாள் ஜனாதிபதி இம் முறை தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மில்லியன் கணக்கான பணத்தை செலவழித்தது அனைவருக்கும் தெரிந்த விடயமே. எமது நாட்டில் 1977 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஒட்டுமொத்த தேர்தலுக்கு செலவிடப்பட்ட பணத்தை இம்முறை ஜனாதிபதி தேர்தல்களுக்கு மஹிந்த ராஜபக் ஷ செலவிட்டுள்ளார். இவை அனைத்தும் மக்களிடம் இருந்து அபிவிருத்தி என்ற போர்வையில் சுறையாடப்பட்டவையே. இது தொடர்பிலும் அனைத்து தகவல்களையும் திரட்டி விசாரணைகளை மேற்கொள்வோம்.
புதிய சுபீட்சமான தேசத்துக்கு எம்மிடம் நாடு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, எமது நாட்டை ஊழல் அற்ற சுபீட்சமான தேசமாக மாற்றிட எமது அனைத்து பங்களிப்பினையும் மேற்கொள்வோம் என மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply