அணு ஆயுத தாக்குதலை தடுப்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்: பான் கி மூன்

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் டெல்லியில் சர்வதேச உறவுகள் தொடர்பான இந்திய குழுவினரின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதில் குறிப்பிட்ட சில நாடுகளின் தூதர்களும், வெளியுறவுத்துறை நிபுணர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பான் கி மூன் கூறியதாவது:- தீவிரவாதம் உலகின் மிகப்பெரிய சவால். பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதல் நமது சுதந்திரத்தின் இதயத்தில் விழுந்த அடி. மும்பையில் நடந்த தாக்குதல், சமீபத்தில் பெஷாவரில் பள்ளி குழந்தைகள் மீது நடந்த தாக்குதல் போன்று தெற்கு ஆசிய பிராந்தியத்தில் தீவிரவாத வன்முறைகள் அதிகரித்திருப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்தியாவும், ஐக்கிய நாடுகளும் மாறிவரும் உலகில் இருக்கிறது. தெற்கு ஆசிய பகுதியில் பாதுகாப்பான பிராந்திய சுற்றுச்சூழல், நிலைத்தன்மை ஆகியவை இந்தியாவுக்கு அதன் நோக்கத்தையும், கொள்கையையும் அடைய உதவி செய்யும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற வகையில் இந்த பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்.

அரசியல் தலைவர்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குறைகள் மற்றும் பழைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். குறிப்பாக இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே உள்ள பிரச்சினைகள், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே உள்ள நிலையற்ற தன்மை நீடிப்பது போன்றவை அந்தந்த நாடுகளுக்கு மட்டும் பொறுப்பானதல்ல. ஆப்கானிஸ்தானில் முக்கிய உலக சவாலான தீவிரவாதத்தையும், பருவநிலை மாற்றத்தையும், வறுமையையும் ஒழித்து மீண்டும் அமைதியையும், நிலைத்தன்மையையும் கொண்டுவர வேண்டும்.

தெற்கு ஆசிய பகுதியில் அணு ஆயுத தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அணு ஆயுதங்கள் உற்பத்தி அதிகரிப்பதை தடுப்பதற்கான பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும்.

அமைதியை காப்பதில் ஐ.நா.வின் கொள்கைகளை உருவாக்கும் முடிவுகளை எடுப்பதில் இந்தியாவின் தேவையும் உள்ளது. ஐ.நா.வின் அமைதி காக்கும் திட்டங்களில் மிகப்பெரிய பங்களிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இவ்வாறு பான் கி மூன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply