இழந்த ஒற்றுமையை இலங்கை மக்கள் பெற வேண்டும்: மன்னாரில் போப் வேண்டுகோள்

இலங்கை வந்துள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தமிழ் சிங்கள மொழிகளைப் பேசும் சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை மக்கள் இழந்துவிட்ட ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற கடின முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று மடுத்திருப்பதியில் இடம்பெற்ற ஆராதனையின்போது தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள நானூறு வருடங்கள் பழைமை வாய்ந்த கத்தோலிக்கத் திருத்தலமாகிய மடுத்திருப்பதிக்கு முதற் தடவையாக இப்போதுதான் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையொருவர் விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்த மோதல்கள் இடம்பெற்றதையடுத்து, மடுத்திருப்பதியில் இருந்து மடு மாதாவின் திருவுருவச் சிலை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மீண்டும் அங்கு கொணடு வரப்பட்டதையும் திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர், அன்னை மரியாளின் திருவுருவம் மடுத்திருத்தலத்திற்குத் திரும்பி வந்தது போன்று, அனைத்து இலங்கை மக்களும் ஒப்புரவுடனும், தோழமையுடனும், புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன் ஒன்றுபடுவதற்குப் பிரார்த்திப்பதாகவும் அவர் அங்கு நடைபெற்ற ஆராதனையின்போது குறிப்பிட்டார்.

கொழும்பில் இருந்து விசேட ஹெலிகாப்டர் மூலமாக புதனன்று பிற்பகல் 3 மணியளவில் மடுமாதா தேவாலயத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மங்கள வாத்தியம் முழங்க, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், மன்னார் ஆயர் உள்ளிட்ட கத்தோலிக்க மதத் தலைவர்களும் வரவேற்றனர்.

திருத்தந்தையைத் தரிசித்து ஆசி பெறுவதற்காக அங்கு கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் கொடிகளை அசைத்தும், ஆரவாரம் செய்தும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவர் நடராஜன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள், வயோதிபர்கள் காணாமல் போயுள்ளவர்களின் குடும்பத்தினர் என பலதரப்பட்டவர்களையும் அவர் சந்தித்து ஆசிர்வதித்தார்.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலான, மடுத்திருப்பதிக்கான தமது விஜயத்தை முடித்துக் கொண்டு அவர் கொழும்பு திரும்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply