இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜும் சந்திப்பு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்துக்கொண்ட உயர்மட்டக்குழுவின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது. இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக புதுடில்லி வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நாளை திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற ஒரு வார காலத்திற்குள், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு பயணம் மேற் கொண்டுள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணமாக கருதப்படுகிறது. மேலும் மங்கள சமரவீர மற்றும் சுஷ்மா சுவராஜ் இடையேயான சந்திப்பின் போதும் கூட, இலங்கை அமைச்சர், தாங்கள் இந்தியவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்திய அமைச்சரிடம் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும் இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்தி வந்தபோதும் கூட சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமும் சமமான உறவை ஏற்படுத்தி வந்தது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கத்தில் தான், இத்தகைய செயல்களில் இலங்கை ஈடுப்படுவதாக அப்போது இந்திய தரப்பில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் இலங்கையில் பொறுபேற்றுள்ள புதிய அரசாங்கம், இந்தியாவுக்கு முதல் முக்கியத்துவம் அளிப்பதாக வெளிப்படுத்தியுள்ளது. இருநாட்டுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் என்கிற எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இன்றைய சந்திப்பின்போது மீனவர்கள் விவகாரம், தமிழர்கள் நல்வாழ்வு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் இலங்கை நாட்டில் தேர்வாகியுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் குறித்தும் அப்போது ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply