வீண் செலவுகளை தவிர்த்து அபிவிருத்திகள் முன்னெடுப்பு : அமைச்சர் ரவி கருணாநாயக்க
கடந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் எவ்வித மேலதிகமான வீண் செலவுகளின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். தயட்டகிருல போன்ற வீண் செலவுகள் நிறுத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். வருடா வருடம் நடத்தப்பட்டு வந்த தயட்டகிருல கண்காட்சி ஒரு வீண் செலவு. இதனால் ஏற்படுகின்ற அபிவிருத்தியைவிட முதலீட்டுச் செலவு அதிகமாக உள்ளது.
இவ்வாறான வீண் செலவுகளை உடனடியாக நிறுத்தி, மக்களுக்கு மேலும் பலன்களைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். போலியான ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். நாம் உண்மையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளையே பகிரங்கப்படுத்தி வருகின்றோம்.
நிதி அமைச்சு ஒரு குடும்பத்துக்குக் கட்டுப்பட்டிருந்த யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. திறைசேரிக்குத் தெரியாமல் பல்வேறு முதலீடுகளுக்கான பணம் வெளியில் சென்றுள்ளது. குறிப்பாக ஷங்கிரிலா, ஐ.ரி.சி போன்ற நட்சத்திர விடுதிகளுக்கான முதலீடுகளுக்கு கிடைத்த 2000 கோடி ரூபா திறைசேரிக்கு வழங்கப்படாமல் பாதுகாப்பு அமைச்சிற்கு நேரடியாக வங்கிக் கணக்கின் மூலம் வைப்பிலிடப்பட்டிருந்தது.
இந்தப் பணத்தை நாம் திறைசேரிக்கு மீளப்பெற்றுள்ளோம். திறைசேரி மோசமான நிலையில் இருந்தாலும் கடந்த தேர்தலின் போது உறுதியளித்ததுக்கு அமைய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கக் கூடிய வகையில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply