பொதுமக்கள், அதிமுக்கியஸ்தர்கள் பங்குபற்றும் கூட்டங்களுக்கு பாதுகாப்பு முன் அனுமதி கட்டாயம்:உதய நாணயக்கார
பொதுமக்கள் பங்குபற்றும் பொது வைபவங்கள், பொதுக் கூட்டங்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை பாதுகாப்பு அமைச்சு நேற்று முதல் அமுல்படுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்ற அதேசமயம் அதன் உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் அந்தக் கூட்டம் தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய மீலாதுந் நபி விழாவின் போது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து அரசாங்கமும், பாதுகாப்பு அமைச்சும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
அவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியையும், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கும் பட்சத்தில் அந்த வைபவம் சிறப்பாக நடைபெற்று முடிவதற்குத் தேவையான போது பாதுகாப்புகளை வழங்க முடிவதுடன், இது போன்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பேரழிவுகளிலிருந்து முன் கூட்டியே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.
தமிழ், சிங்கள புத்தாண்டை எதிர்நோக்கியுள்ள அதேசமயம் அதனையொட்டிய பல்வேறு முக்கிய சமய நிகழ்வுகள், விளையாட்டு வைபவமும் இடம்பெறவுள்ளன. இதன் போதும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹலுகல்லே தெரிவித்தார்.
தசிய மட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், அமைச்சர்கள் மற்றும் அதி முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு மாத்திரமின்றி பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடும் கூட்டம் மற்றும் நிகழ்வுகளின் போதும், ஊர்வலங்களின் போதும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
வன்னி மனிதாபிமான படை நடவடிக்கைகள் மூலம் புலிகள் முற்றாக முடக்கி விடப்பட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்துள்ள புலிகள் இது போன்ற தாக்குதல்களை நடத்தி பதற்ற நிலைமைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கலாம்.
இவற்றைக் கருத்திற் கொண்டும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் வகையிலேயே இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply