புலிகள் மதத் தலங்களை தாக்குவதை முஸ்லிம் நாடுகள் உட்பட சர்வதேசம் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்:லக்ஷ்மன் யாப்பா

புலிகள் மதத் தலங்களை இலக்கு வைத்து நடத்தியிருக்கும் 10வது தாக்குதல் தேசிய மீலாத் விழா நிகழ்வில் நடத்தப்பட்டதாகும். இந்த மோசமான தாக்குதலை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள இத்தகைய சூழலில் முஸ்லிம் நாடுகள் உட்பட சகல நாடுகளும் ஆயுதத்தைக் கீழே வைக்க வேண்டுமென்று புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கீ மூன், புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளதுடன் வன்னி மக்களை சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டுமெனவும் பல சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளின் இவ்வலியுறுத்தலானது புலிகள் மக்களை பணயக் கைதிகளாக அடிமைப்படுத்தி வைத்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று தகவல், ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-

வடக்கில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவிவரும் விடுதலைப்புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டு இன, மத ரீதியான குழப்பங்களை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளனர்.

மாத்தறை கொடப்பிட்டியவில் இடம்பெற்றுள்ள தாக்குதலும் இத்தகையதே. 1985ம் ஆண்டு ஸ்ரீமாபோதி விஹாரையின் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பத்து சமயத் தலங்கள் மீதான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச நாடுகளை நோக்குகையில் இத்தகைய சமய வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் எதேச்சையாக நடப்பவையேயல்லாமல் திட்டமிட்டு மேற்கொள்பவையல்ல. புலிகளின் இச்செயல்கள் சர்வதேசத்தின் கண்டனத்திற்கு இலக்காகி வருகின்றன.

மாத்தறை கொடப்பிட்டிய தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். மாத்தறை மாவட்டத்தைப் பொறுத்தவரை இது பாரிய இழப்பாகும்.

இம்மாவட்டத்தில் மக்களுடன் நெருக்கமாக சேவை செய்த பல பிரதேச அரசியல் பிரதிநிதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய மோசமான சம்பவமொன்று இடம்பெற்ற போதும் மத ரீதியான குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட்டனர். ஊடகங்கள், மருத்துவத்துறையினர் இச்சம்பவத்தின் போது வழங்கிய உறுதுணைக்காக அரசாங்கம் நன்றி தெரிவிக்கிறது. அதேவேளை இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply